Published : 25 May 2015 10:21 AM
Last Updated : 25 May 2015 10:21 AM

அதிமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை: பைக்கில் வந்த 4 பேர் கும்பல் அடையாளம் தெரிந்தது

அயனாவரத்தில் அதிமுக வட்டச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை அயனாவரம் கீழ்ப்பாக்கம் சன்னியாசிபுரம் குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரவி(48). வில்லிவாக்கம் பகுதி அதிமுக 58–வது வட்டச் செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அன்று இரவில் வில்லிவாக்கம் பெருமாள் கோவிலுக்கு சென்று பூஜை செய்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார்.

சன்னியாசிபுரம் பிரதான சாலையில் வந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், திடீரென ரவியின் மோட்டார் சைக்கிளை வழி மறித்து, அவரை அரிவாளால் வெட்டினர். உடனே ரவி மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடினார். ஆனால் கொலைகார கும்பல் அவரை துரத்தி சென்று தலை, கழுத்து மற்றும் உடலில் சரமாரியாக வெட்டினர்.

ரவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கொலைகார கும்பலை சுற்றி வளைக்க, அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி தப்பி சென்றனர். அப்போது அந்த வழியாக ரவியின் மகன் தினகரன் (22) மோட்டார் சைக்கிளில் வந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ரவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தலைமைச் செயலக காலனி போலீஸார் விசாரணை நடத்தி, ரவியின் உடலை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முன்பு குவிந்தனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டுமென கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "அயனாவரம் குட்டியப்பன் தெருவில் மீன்கடை நடத்தி வருகிறார் ரவி. கட்சி நிகழ்ச்சிக்காக அவர் அடிக்கடி வெளியே சென்று விடுவதால் அவரது மகன் தினகரன் கடையை நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி சதீஷ் என்பவர் தினகரனிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்ய, அவர் கொடுக்க மறுக்கவே தினகரனை தாக்கியிருக்கிறார் சதீஷ். இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீஸில் ரவி புகார் கொடுக்க, சதீஷை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினர் போலீஸார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், ரவியை வெட்டி கொல்வேன் என பலரிடம் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை சம்பவம் நடந்த அன்று, ரவி இருக்கும் பகுதியில் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது. ரவியை கொலை செய்வதற்காக கொலை கும்பலே மின்சாரத்தை தடை செய்திருப்பது பின்னர் தெரியவந்தது. சதீஷ் அவரது உறவினர்கள் தாஸ், அசோக், ஆனந்த் ஆகிய 4 பேர் ரவியை பின் தொடர்ந்து வந்து அவரை வெட்டி கொன்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் 4 பேரையும் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் தப்பி சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளை விட்டு சென்று விட்டனர். அதை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

கொலை செய்யப்பட்ட ரவிக்கு லல்லி (40) என்ற மனைவியும், தினகரன், கருணா என்ற மகன்களும், ஜெயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

ஜெயலலிதா இரங்கல்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "வட சென்னை வடக்கு மாவட்டம் வில்லிவாக்கம் கிழக்கு வட்ட செயலாளர் ரவி கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். இந்த படுகொலையை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x