Published : 23 May 2014 12:00 AM
Last Updated : 23 May 2014 12:00 AM
இடிந்தகரையில் இரு தரப்பினர் களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கியதில், 3 வீடுகள் மற்றும் 2 கார்கள் சேதமடைந்துன. 65 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இடிந்தகரையைச் சேர்ந்த எஸ். சகாயகபூர், இவரது சகோதரர் லாரன்ஸ் மற்றும் உறவினர்கள் 10 பேர் புதன்கிழமை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். மனுவில், ‘தங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’ என்றும் குறிப்பிட் டிருந்தனர்.
இடிந்தகரை ஊர்நலக்கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றொரு மனு கொடுக்கப்பட்டது. ‘கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக நடைபெறும் அறவழிப்போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக சகாய கபூர் உள்ளிட்டோர் புகார் தெரிவித்திருப்பதாக’ அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெடிகுண்டு வீச்சு
புதன்கிழமை இரவு 10.15 மணிக்குமேல் இடிந்தகரையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக தெரிகிறது.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சகாயம், கைபட், இளங்கோ ஆகியோரின் வீட்டு ஜன்னல்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 கார் கண்ணாடிகள் சேதம் அடைந்துன. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கூடங்குளம் காவல் நிலையத்தில் இடிந்தகரையைச் சேர்ந்த சகாயம் மனைவி ஜெரேமியா, கைபட் மனைவி ஆனந்தி, இளங்கோ மனைவி ஜெரோனி, அந்தோனி சந்தியாகு, சகாயகபூர் ஆகிய 5 பேரும் தனித்தனியாக புகார் செய்தனர். போலீஸார் 65 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மோதலைத் தொடர்ந்து இடிந்தகரையில் மீனவர்கள் வியாழக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இது தொடர்பாக போலீஸார் நேரில் விசாரணை நடத்தினர்.
வெடிகுண்டுகளை ஒப்படைக்க மீனவர்கள் முடிவு
வியாழக்கிழமை ராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் மீனவர்கள் பங்கேற்ற சமாதான பேச்சுவார்த்தை நடை பெற்றது.
அப்போது இரு தரப்பிலும் உள்ள நாட்டு வெடிகுண்டுகளை விரைவில் ஒப்படைக்க இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். புதன்கிழமை நடைபெற்ற சம்பவத்துக்கு காரணமான நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT