Published : 23 May 2015 10:40 AM
Last Updated : 23 May 2015 10:40 AM
சென்னையை சேர்ந்த பெண் குழந்தை தனலட்சுமிக்கு, பிறந்த இரண்டாவது நிமிடத்திலேயே செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ‘சுகன்யா சம்ருதி யோஜனா’ என்னும் சேமிப்பு திட்டத்தை அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 14வயது பூர்த்தியான பெண் குழந்தைகள் வரை கணக்கு தொடங்கலாம். இந்த திட்டம், ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், சென்னை கோவூரை சேர்ந்த ராஜசேகர், ஜெயலட்சுமி தம்பதிக்கு பிறந்த தனலட்சுமி என்னும் பெண் குழந்தைக்கு, பிறந்த 2-வது நிமிடத்திலேயே செல்வமகள் சேமிப்புத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை சோமங்கலம் புதுநல்லூர் அருகே மொபைல் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளவர் ராஜசேகர். அவரது மனைவி ஜெயலட்சுமி கருவுற்றிருந்தார். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை பற்றி கேள்விப்பட்டு, தனக்கு பெண் குழந்தை பிறந்தால், அத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வேண்டும் என்று கோவூர் துணை அஞ்சல் நிலைய அதிகாரி சுரேஷை ராஜசேகர் தொடர்பு கொண்டு கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி ஜெயலட்சுமி பிரசவத்துக்காக கடந்த வியாழக்கிழமையன்று சோமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட் டிருந்தார். ஜெயலட்சுமிக்கு இன்று (நேற்று) காலை 9.35 மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிறந்த 2-வது நிமிடத்தில், அந்த குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கப் பட்டது. இந்திய அளவில் இது மிகப்பெரிய சாதனையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT