Published : 07 May 2015 04:47 PM
Last Updated : 07 May 2015 04:47 PM
மாணவ, மாணவியருக்கான சீருடை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் தங்களிடமே வாங்குமாறு பெற்றோரை தனியார் பள்ளிகள் நிர்ப்பந்திக்கின்றன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்க இன்னும் 3 வார காலம் இருக்கும் நிலையில் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கவும், அவர்களுக்கு தேவையான துணிமணிகள், கற்பதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்கவும் பெற்றோர்கள் தயாராகிவிட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை தங்கள் பிள்ளைகளுக்கு தேவையான சீருடைகள், ஷூ, சாக்ஸ், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை பெற்றோரே, தங்களது பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு சிறு கடைகளில் வாங்கிவந்தனர். இதனால் மே மாதங்களில் இத்தகைய பொருட்களையும், ஆடைகளையும் விற்பனை செய்யும் சிறுகடைகளில் வியாபாரம் நன்றாக இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.
அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ, மாணவியருக்கான சீருடைகள், டை, பெல்ட், ஷூ, சாக்ஸ், நோட்டுப் புத்தகங்கள் போன்ற அனைத்தையும் விற்கின்றனர். தங்களிடம்தான் அவற்றை வாங்க வேண்டும் என்று பள்ளிகள் நிர்ப்பந்திக்கின்றன.
அவ்வாறு பள்ளிகளில் வாங்கும் பொருட்க்கான விலை, சந்தைமதிப்பைவிட அதிகமாக இருப்பதுதான் பெற்றோரை தலைசுற்ற வைக்கிறது. பல பள்ளிகளில் உரிய ரசீதுகளைகூட பெற்றோருக்கு வழங்காமல் ஒட்டுமொத்தமாக பணத்தை பெற்றுக்கொள்கிறார்கள். இந்த பொருட்களை சிறுகடைகளில் வாங்கினால் விலை குறைவாக கிடைப்பதுடன், தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அவற்றை வாங்கி கொள்ள பெற்றோருக்கு வாய்ப்பு இருந்தது. இப்போது அவ்வாறு இல்லை. அதேவேளை வியாபாரமின்றி சிறுவியாபாரிகள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி சந்திப்பில் ஷூ, சாக்ஸ் விற்பனை செய்யும் சிறு வியாபாரி கே.பீர்முஜ்புர் ரஹ்மான் கூறியதாவது:
எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரையிலான மாணவர், மாணவியருக்கான 8 முதல் 10 எண் அளவுள்ள ஷூக்கள் எங்களிடம் ரூ.120 முதல் ரூ.150-க்குள் வாங்கலாம். இதுபோல் சாக்ஸ் ரூ.25 முதல் ரூ.30-க்குள் வாங்கலாம். ஆனால் பள்ளிகளில் இந்த அளவுள்ள ஷூக்களுக்கு ரூ.250-ம், சாக்ஸுக்கு ரூ.50ம் வசூலிக்கப்படுகிறது. இந்த அளவுக்கு விலையை அதிகமாக வசூலிப்பது குறித்து பல வாடிக்கையாளர்கள் எங்களிடம் புலம்புகிறார்கள். பள்ளிகளே இவ்வாறு பொருட்களை வாங்க நிர்ப்பந்திப்பதால் எங்களைப்போன்ற சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
பள்ளி சீசன் நேரத்தில்தான் விற்பனை இருக்கும். இப்போது அதற்கும் பாதிப்பு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT