Published : 05 May 2015 08:37 AM
Last Updated : 05 May 2015 08:37 AM
திருச்சி சுங்கத்துறை அலுவலகத் தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டி கள் மாயமானது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், மாயமான தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் காரில் கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்கக் கட்டிகளை திருவாரூரில் சுங்கத் துறையினர் கைப்பற்றினர். இவை திருச்சி அலுவலக பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந் தன. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவாரூர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஏப்.17-ம் தேதி பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள தங்கக் கட்டிகளை சரிபார்க்க சுங்கத் துறை ஆய்வாளர் சென்றபோது,18.5 கிலோவுக்கு பதிலாக 3.5 கிலோ தங்கக் கட்டிகள் மட்டுமே இருந்ததும், 15 கிலோ தங்கக் கட்டிகள் காணாமல்போனதும் தெரியவந்தது. இதுதொடர்பாக திருச்சி மண்டல சுங்கத்துறை ஆணையர் விசாரணை மேற் கொண்டு சுங்கத்துறை கண் காணிப்பாளர் முகமது பாரூக் மற்றும் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தார்.
இதையடுத்து தங்கக் கட்டிகள் மாயமானது தொடர்பான வழக்கை சிபிஐ டிஎஸ்பி தலைமையிலான 16 பேர் அடங்கிய குழு விசாரித்து வருகிறது. கடந்த 15 தினங்களுக்கு மேலாக திருச்சியில் முகாமிட்டுள்ள சிபிஐ குழுவினர் திருச்சி விமான நிலையம், சுங்கத்துறை அலுவலகம் மற்றும் திருவாரூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் முகாமிட்டுள்ள 6 பேர் கொண்ட சிபிஐ குழு கடந்த ஓராண்டில் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், யார் யாரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது முகவரி, தொடர்பு எண்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஏற்கெனவே மாயமான தங்கம் மட்டுமல்லாது கூடுதலாக மேலும் 15 கிலோ தங்கம் மாயமாகியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே திருவாரூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை பகுதியில் தங்கம் கடத்துவதைத் தொழிலாகக் கொண்டவர்களை கண்காணித்துவரும் சிபிஐ குழுவினர், திருச்சி சுங்கத்துறை அலுவலக அதிகாரிகளின் செல்போன் எண்களையும் கண்காணித்தனர்.
மேலும், திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திலேயே தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் குறித்தும் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது மாயமான தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கக் கட்டிகளை வைத்து,கணக்கை சரிசெய்ய முயற்சிகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. எனவே, கடந்த ஓராண்டில் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எவ்வுளவு எனவும், அதில் தற்போதுள்ள இருப்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ குழுவினர், இருப்பு உள்ள தங்கக் கட்டிகள் அனைத்தும் தங்கக் கட்டிகள்தானா அல்லது தங்க முலாம் பூசப்பட்டவையா என ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கடத்துவதைத் தொழிலாகக் கொண்டுள்ள நாகப் பட்டினம் மாவட்டம் வேதாரண் யத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரே போலியான தங்கக் கட்டிகளை சப்ளை செய்வதாகவும் கூறப்படுகிறது. திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் தங்கக் கட்டிகள் மாயம் என்பது 3-வது முறை என்பதால் சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT