Published : 22 May 2015 08:26 AM
Last Updated : 22 May 2015 08:26 AM

எஸ்.ஐ. தேர்வில் பங்கேற்க திருநங்கைக்கு அனுமதி

எஸ்.ஐ. பணிக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள திருநங்கை உள்ளிட்ட பலருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கையான கே.பிரித்திகா யாசினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியதாவது:

நான் பிறக்கும்போது ஆணாக பிறந்தேன். என் பெயர் கே.பிரதீப் குமார் என சான்றிதழில் இருந்தது. பின்னர், என் உடலில் ஏற்பட்ட பெண்மை மாற்றத்தைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தேன். எனக்கு திருநங்கை என்ற சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.ஐ. பணிக்கு ‘ஆன் லைன்’ மூலம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி விண்ணப்பம் செய்தேன். இதையடுத்து, கடந்த 18-ம் தேதி சீருடைப் பணியாளர் இணையதளத்தில் பார்த்தபோது என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட் டிருந்தது. எஸ்.ஐ. பதவிக்குரிய கல்வி தகுதி அனைத்தும் இருந்தும் நான் திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, எஸ்.ஐ. பதவிக்காக நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் என்னை அனுமதிக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதேபோல், ‘ஆன் லைன்’ விண்ணப்பத்தில் கல்வித் தகுதி, வயது ஆகிய விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்படவில்லை’ என்று கூறி பலரது விண்ணப்பங்களை சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் நிராகரித்து இருந்தது. இதை எதிர்த்தும் சிலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப் பித்த இடைக்கால உத்தரவில், ‘‘மனுதாரர் பிரித்திகா யாசினி உட்பட மனுதாரர்களை எழுத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

இவர்களுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 8 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

மனுதாரர்கள் தேர்வு தினத்தன்று தங்களது சான்றிதழ்கள் அனைத் தையும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அவற்றை சரிபார்த்து விட்டு மனுதாரர்களை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x