Published : 28 May 2015 08:00 AM
Last Updated : 28 May 2015 08:00 AM

150-வது ஆண்டில் காஞ்சி நகராட்சி: இடநெருக்கடியில் பேருந்து நிலையம் - புதிய இடம் தேர்வு செய்வதில் சிக்கல்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் இடநெருக்கடி அதிகரித்து வருவதால், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

கோயில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தின் மைய பகுதியில், நகராட்சி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. கடந்த1991-ம் ஆண்டு 65 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் 1998-ம் ஆண்டு ரூ.1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தின் உள்ளே அமைக்கப் பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை யிலிருந்து 120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நகர்ப்புற வளர்ச்சி, மக்கள் பெருக்கத்தினால், தற்போதுள்ள பேருந்து நிலையம் இடநெருக் கடியுடன் செயல்பட்டு வருகிறது. இதனால், அடிப்படை வசதி களுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பொன்னேரிக்கரை பகுதியில், புதிய பேருந்து நிலையத்துக்கான இடம் அடையாளம் காணப்பட்டது. ஆனால், அந்த இடம் நீர்நிலை தொடர்புடையது என்பதால், அங்கு பேருந்து நிலையம் அமைக்க நீதிமன்றம் தடைவிதித்தது.

இதையடுத்து, 2012-ம் ஆண்டு, காஞ்சிபுரம்-வேலூர் சாலையில், சர்வதீர்த்தகுளம் அருகே ஏகாம் பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 16.08 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதிகாரிகளின் ஆய்வுக்கு பின், புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நகரமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஆனால், பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்யப் பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்பதாலும். தேசிய நெடுஞ் சாலைக்கு மிக தொலைவில் அமைந்திருந்ததாலும், அங்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை நகராட்சி கைவிட்டது.

இதைத் தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்துக்காக மீண்டும்,சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யுள்ள சித்தேரி கிராமத்தில் 50 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. இங்கு புதிய பேருந்து நிலையத்தை அமைக்க அரசின் ஒப்புதலைக் கேட்டு நகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியுள்ளது. பேருந்து நிலையத்துக்கான நிலம் தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் நகராட்சி தோற்றுவிக்கப்பட்டு 150 -வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளதால், சிறப்பு நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரவாசிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி தலைவர் மைதிலி கூறியதாவது: சித்தேரி பகுதியில் பேருந்து நிலையத்துக்கு நிலம் கண்டறியப்பட்டது. ஆனால், நகராட்சி பகுதியில் இருந்தால் மட்டுமே நம்மால் நிலத்தை கையகப்படுத்த முடியும். அதனால், சித்தேரி கிராமத்தை நகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக அரசின் ஒப்புதலை கோரியுள்ளோம். ஒப்புதல் கிடைத்த பிறகே தொடர் நடவடிக்கைகள் எடுக்க முடியும். எனினும், சர்வதீர்த்தகுளம் அருகே தேர்வு செய்யப்பட்ட நிலப்பகுதியில் பேருந்து நிலையம் அமைத்தால், நகரவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x