Published : 14 May 2015 10:24 AM
Last Updated : 14 May 2015 10:24 AM

மாட்டுத்தொழுவமான அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள்: பெரும்பாலும் பூட்டிக் கிடக்கும் அவலம்

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கிராமங்களில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் தற்போது பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன.

இந்நூலகங்களில் பெரும்பாலானவை கால்நடைகளை கட்டிப்போடும் தொழுவமாகவும், இளைஞர்கள் அரட்டை அடிக்கும் இடமாகவும் மாறிவிட்டதால், நூலகங்கள் தொடங்கப்பட்ட தன் நோக்கம் நிறைவேறாமல் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12,657 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அடித்தட்டு மக்க ளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற் படுத்த, 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் திறக்கப்பட்டன. இதற்காக, தலா ரூ. 3 லட்சம் முதல் ரூ. 3.50 லட்சம் செலவில் கட்டிடங்கள் கட்டப்பட் டன. ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தகங் கள் நூலகங்களில் வைக்கப்பட்டன. தினமும் காலை 8 மணி முதல் பிற் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் இந்த நூலகம் திறந்தி ருக்க வேண்டும்.

இந்த நூலகங்களை, கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் பொறுப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆரம்பத்தில் ரூ. 750 மாத ஊதியத்தில் நிர்வகித்தனர். பின்னர், ரூ. 1,500 வரை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சில கிராம ஊராட்சிகளைத் தவிர்த்து, 80 சதவீத ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் செயல் படாமல் உள்ளன. பல ஆண்டு களாக பூட்டிக் கிடந்ததால், நூலக கட்டிடங்கள் தற்போது மாடுகளை கட்டும் தொழுவங்களாக மாறி விட்டன.

இதுகுறித்து பொது நூலகத் துறை நூலகர்கள் கூறியதாவது:

‘‘தற்போதைய அரசு, இந்த நூலகங்களை பராமரிக்க நிதி ஒதுக்கவில்லை. சில பஞ்சாயத்து தலைவர்கள், சொந்த முயற்சியில் நூலகங்களை நடத்தினாலும், அவை தினமும் சில மணி நேரம் மட்டுமே செயல்படுகின்றன.

இந்த நூலகங்களை, பொது நூலகத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நூலகத் துறை சங்கங்கள் பலமுறை வலியுறுத்தியும், அரசு ஆர்வம் காட்டவில்லை. பொது நூலகத் துறையுடன் இணைத்தால், நூலகம் இல்லாத கிராமங்களில் அண்ணா மறு மலர்ச்சி நூலகங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம். நூலகம் இருக்கும் ஊர்களில், இரு நூலகத்தையும் இணைத்துவிடலாம்.

பொது நூலகத் துறைக்கென அரசு தனியாக நிதி ஒதுக்க வேண்டியதில்லை. ஏனெனில், பொதுமக்கள் செலுத்தும் வரிகளில் 10 சதவீதம் தானாகவே, பொது நூலகத் துறைக்கு சென்றுவிடும். இந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வோர் ஆண்டும் 10 கோடி ரூபாய் கிடைக்கிறது.

கோவையில் ரூ. 3 கோடி என தமிழகத்தில், ஆண்டுக்கு ரூ. 300 கோடி நூலகத் துறைக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த நிதியைக் கொண்டு, அண்ணா மறுமலர்ச்சி நூலகங்களை சிறப்பாகச் செயல்படுத்தலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x