Published : 27 May 2015 05:24 PM
Last Updated : 27 May 2015 05:24 PM

கந்தர்வக்கோட்டையில் ரூ.13 கோடியில் அரசு பாலிடெக்னிக் கட்டிடம்: விரைவில் திறக்க மாணவர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ரூ.13 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கந்தர்வக்கோட்டையில் 2013-ம் ஆண்டு முதல் தனியார் கட்டிடத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இதையடுத்து, கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள புதுப்பட்டியில் சுமார் 13 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 2014 பிப். 12-ல் ரூ.13 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

இங்கு, தொழில்நுட்பக் கல்விக் கோட்ட பொதுப்பணித் துறை மூலம் 6,737 சதுரமீட்டர் பரப்பில், 4 தளங்களில் முதல்வர் அலுவலகம், 15 வகுப்பறைகள், 18 ஆய்வக அறைகள், கூட்ட அரங்கங்கள், கணினி ஆய்வகம், நூலகம், வரைபடக் கூடம், மாணவ, மாணவியர் ஓய்வறை, பேராசிரியர்கள் அறை, துறை அலுவலகம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 3,154 சதுரமீட்டர் பரப்பில் பட்டறை, விருந்தினர் குடியிருப்பு, முதல்வர் குடியிருப்பு, உடற்பயிற்சிக் கூடம், சிற்றுண்டி சாலை, காவலர் அறை, மாணவர் விடுதி உள்ளிட்ட கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்காகக் காத்திருக்கிறது புதிய கட்டிடம்.

எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி, வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பாலிடெக்னிக்கில் பயின்று வரும் மாணவர்கள், புதிய கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்விக் கோட்ட பொதுப்பணித் துறையினர் கூறும்போது, “கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி ஓராண்டில் முடிக்கப்பட்டு, கல்லூரி வசம் புதிய கட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முதல்வரால் காணொலிக் காட்சி மூலம் இந்தக் கட்டிடம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x