Last Updated : 18 May, 2015 08:18 AM

 

Published : 18 May 2015 08:18 AM
Last Updated : 18 May 2015 08:18 AM

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பது எப்போது?- கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த விவசாயிகள் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் தேதியை முடிவு செய்வது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகையில் சுமார் 3.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். இதற்காக, மேட்டூர் அணையி லிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.

எனினும், மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளபோது, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் தேதியை முடிவுசெய்ய தஞ்சையில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

2007-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, அப்போதைய அமைச்சர்கள் துரைமுருகன், கோ.சி.மணி தலைமையில் தஞ்சையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், விவசாயிகளின் கருத்துகள் புறக் கணிக்கப்பட்டதால், விவசாயிகள் கூட்டத்திலிருந்து பாதியில் வெளி யேறினர். தகவலறிந்த அப் போதைய முதல்வர் கருணாநிதி, விவசாயிகள் விரும்பியபடி ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை யிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என உடனடியாக அறிவித்தார்.

நீர் மட்டம் 67 அடி

பின்னர், 2011-ல் மட்டும் ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருந்தபோதிலும், கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.

தற்போது மேட்டூர் அணையில் 67 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதாலும், அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதாலும் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்று விவசாயிகளிடையே சந்தேகம் நிலவுகிறது.

ரூ.550 கோடி இழப்பு

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்க மாவட்டச் செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கூறும்போது, “குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் இருந்து, 40 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பிருந்தால் ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வேண்டும். எனவே, கர்நாடகம் மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கு தமிழகத்துக்கு விடவேண்டிய தண்ணீரைக் கேட்டுப்பெற வேண்டும். இல்லையேல், காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியைக் கைவிடுவதால் ஏற்படக்கூடிய ரூ.550 கோடி இழப்பை தமிழக, கர்நாடக அரசுகள் வழங்க வேண்டும். இதுகுறித்து விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி, உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்றார். இதேபோல, பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகளும், கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

ஓய்வுபெற்ற வேளாண் வல்லுநர் குழு நிர்வாகி வா.பழனியப்பன் கூறும்போது, “மேட்டூர் அணையில் 90 அடி தண்ணீர் இருந்து, விநாடிக்கு 15,000 கன அடி நீர்வரத்து இருந்தால் மட்டுமே ஜூன் 12-ல் அணையைத் திறக்கலாம். அப்போதுதான் பிரச்சினையின்றி குறுவை, சம்பா சாகுபடி நடைபெறும்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை முறையாகப் பெய்தால்தான் இது சாத்தியம். ஆனால், நடப்பாண்டு குறைவாகவே மழை பெய்யுமென வானிலை ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல கர்நாடக அரசு, கிடைக்கும் நீர் முழுவதையும் அணைகளில் தேக்கி வைத்துக்கொண்டு, வெள்ளம் வந்தால் மட்டுமே உபரிநீரைத் திறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறப்பது குறித்து ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

கர்நாடகம் மாதவாரியாகத் தர வேண்டிய தண்ணீரைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட குறுவை சாகுபடியை இந்த ஆண்டாவது பிரச்சினை இல்லாமல் மேற்கொள்ள முடியும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x