Last Updated : 22 May, 2015 10:15 AM

 

Published : 22 May 2015 10:15 AM
Last Updated : 22 May 2015 10:15 AM

8 சதுர கி.மீ. பரப்பில் புதிதாக பவளப்பாறை வளர்த்து சாதனை: வெற்றிக்கு முன்னோடி மன்னார் வளைகுடா

இந்தியாவில் பவளப்பாறை மறு உருவாக்க திட்டத்தின் வெற்றிக்கு முன்னோடியாக மன்னார் வளைகுடா பகுதி அமைந்துள்ளது. பவளப்பாறை காலனி முற்றிலும் அழிந்துபோன 8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், இத்திட்டத்தால் மீண்டும் பவளப்பாறைகள் புதிதாக வளர்ச்சி அடைந்துள்ளன.

பவளப்பாறைகள்

இந்தியாவில் பவளப்பாறைகள் அதிகம் உள்ள 4 முக்கிய பகுதிகளில் மன்னார் வளை குடாவும் ஒன்று. இங்கு 21 தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் பவளப்பாறை காலனிகள் அதிகம் அமைந்துள்ளன.

கடற்கரை பகுதிகளை இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும், சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டும் பகுதியாகவும் பவளப்பாறைகள் அமைந்துள்ளன.

32 சதுர கி.மீ. அழிந்தது

மன்னார் வளைகுடா பகுதியில் 110 சதுர கி.மீ. பரப்பளவில் பவளப்பாறை காலனிகள் இருந்தன. பவளப்பாறைகளை வெட்டி எடுத்தல், முறையற்ற மீன்பிடிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் 32 சதுர கி.மீ. பரப்பளவில் பவளப்பாறை காலனிகள் முற்றிலும் அழிந்தன.

பவளப்பாறை வேகமாக அழிந்து வருவதை உணர்ந்த மத்திய அரசு உஷாரானது. பவளப்பாறையை வெட்டி எடுக்கத் தடை விதித்ததோடு, அழிந்த பகுதிகளில் மீண்டும் பவளப்பாறைகளை வளர்க்க மறு உருவாக்க திட்டத்தையும் அறிவித்தது.

செயற்கைத் தளம்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியோடு தமிழ்நாடு வனத்துறை சார்பில் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு `தி இந்து’விடம் கூறியதாவது:

சிமென்ட் பிரேம்களை தயாரித்து, அதில் கான்கிரீட் ஸ்லாப்களை வைத்து செயற்கை தளங்களை உருவாக்கினோம். இந்த செயற்கை தளங்களை பவளப்பாறைகள் அழிந்துபோன பகுதிகளில் 2 முதல் 4 மீட்டர் ஆழத்தில் கடலுக்குள் வைத்தோம். சுமார் 1 மாதத்தில் செயற்கை தளத்தை பற்றிக் கொண்டு பவளப் பாறை உயிர்பெற்று வளரத் தொடங்கியது.

8 சதுர கி.மீ. பரப்பில் வளர்ச்சி

இந்த முறையில் வான் தீவு, காசுவாரி தீவு, விலாங்குசல்லி தீவு, காரியாச்சல்லி தீவு, புழுவினிச்சல்லி தீவு, சிங்கிலி தீவு, பூமரிச்சான் தீவு பகுதிகளில் பவளப்பாறைகள் அழிந்துபோன இடங்களில் 8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீண்டும் பவளப்பாறை காலனியை உருவாக்கியுள்ளோம். பவளப்பாறைகள் புதிதாக வளர்க்கப்பட்ட பகுதியில் மீன்கள், கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது.

இன்னும் சில ஆண்டுகளில் மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகளை இழந்த 32 சதுர கி.மீ. பகுதியையும் மீண்டும் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்கா கடல் பகுதியில் பவளப்பாறை மறு உருவாக்க திட்டத்தை செயல்படுத்தும் பணி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x