Published : 10 May 2015 08:08 AM
Last Updated : 10 May 2015 08:08 AM

போராளிகளுக்கு புகலிடமாகும் திருப்பூர்: அடையாளச் சான்று இன்றி வேலை வழங்குவதால் சிக்கல்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த தம்பதியர், திருப்பூரில் தங்கியிருந்தது போலீஸார் உட்பட பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்று, பலரும் திருப்பூரில் எளிதில் தஞ்சமடைய என்ன காரணம் என்ற கேள்வி அனைவரிடமும் தற்போது எழுந்துள்ளது.

கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ, தேர்வு செய்யும் முதல் இடமாக தொழில் நகரமான திருப்பூர் இருந்து வந்துள்ளது. இது, தற்போது மாவோயிஸ்ட்கள் வரை நீண்டிருப்பதாக கூறுகின்றனர் திருப்பூர்வாசிகள்.

2005-ம் ஆண்டு கூலிப்படை தலைவனாகச் செயல்பட்ட கொரசிவா, திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, சில வாரங்கள் பணிபுரிந்துள்ளார். அப்போது அவரைப் பழிவாங்க நினைத்த தென் மாவட்டக் கும்பல், மங்கலம் சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது.

அதேபோன்று, உரிய ஆவணங்கள் இல்லாத நைஜீரியர் தொந்தரவும் அவ்வப்போது எழுவதுண்டு. திருப்பூர் அருகே பதுங்கியிருந்த மேகாலயா மாநிலப் போராளி குழுத் தலைவர் வில்லியம் ஏ.சங்மா (27), மற்றொரு போராளி குழுவைச் சேர்ந்த அலாஸ் ஆர்.சங்மா (32) ஆகியோரை அந்த மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பனியன் நிறுவனத்தில், கடந்த நவம்பர் 22-ம் தேதி இரவு கைது செய்தனர்.

வெளிநாடு மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் திருப்பூருக்கு வந்து எளிதாக தஞ்சமடைவது குறித்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கூறியதாவது:

ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமான திருப்பூரில், தொழிற்சங்க உரிமைகளை தொழி லாளர்கள் இழந்து வருகிறார்கள். தொழில் வாய்ப்புகள் எப்போதும் குவிந்துகிடக்கின்றன. 20 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி, 6 லட்சம் பேரின் வேலைக்கான இடமாக இருக்கிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களின் செயல்பாடுகளை திருப்பூரில் ஆழமாகப் பதித்து வருகிறார்கள்.

இதில், பொதுவுடமை சார்ந்த கட்சிகளைத் தவிர, பல்வேறு மார்க்ஸிய, லெனினிய குழுக்களும் அடங்கும். தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உரிமையை முழுமையாக கையில் எடுப்ப தில்லை. மாறாக, முதலாளிக்கு ஓரளவு சாதகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இதனால் போராளி, மாவோ யிஸ்ட், பல்வேறு யுத்த குழுக்களைச் சேர்ந்தவர்கள் எளிதில் திருப்பூரில் தஞ்சமடைகிறார்கள். நைஜீரியா, கென்யா, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பலர் இங்கு தொழில் நிமித்தமாக வருகிறார்கள். அதேபோன்று, உத்தரப்பிரதேசம், ஒடிசா, பிஹார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பலர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இது கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர் பிரச்சினைகளுக்கு அரசு, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அக்கறை எடுத்து தீர்வு வேண்டும். இல்லையென்றால், தீவிரவாதக் குழுக்கள், திருப்பூர் போன்ற நகரத்தில் மக்களை நெருங்க வாய்ப்பு அதிகம்.

தொழிற்சங்க மற்றும் அரசியல் கல்வியை தொழிலாளர்களுக்கு அரசு புகட்ட வேண்டும். மாவோயிஸ்ட் தம்பதியர்கூட கடந்த இரண்டரை ஆண்டுகளாக இங்கு தங்கியுள்ளனர். திருப்பூரில் வெவ்வேறு பெயரில்கூட, 10-க்கும் மேற்பட்ட குழுக்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம்.

தொழிலாளர் பிரச்சினைகளுக் காக போராடி, அதன் வாயிலாக அவர்களது அரசியல் கொள்கைகளைக் கொண்டு செல்வது என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். இந்த முறையிலான பல்வேறு குழுக் களின் அரசியல் நடவடிக்கைகள் தவிர்க்க இயலாதவை. இவ்வாறு அவர் கூறினார்.

வெளியேற வேண்டாம்

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாவோயிஸ்ட் தம்பதியர் தங்கியிருந்த பகுதி, மக்கள் நெருக்கம் நிறைந்த திருப்பூர் எம்.எஸ்.நகர், டி.எம்.எஸ்.நகர் 2-வது வீதி. திருப்பூர் பனியன் மற்றும் டையிங் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்துவிட்டால், நிறுவனத்தை விட்டு வெளியேறாமல், எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் நிறுவனத்துக்குள்ளேயே தங்கி வேலை பார்க்கலாம். உணவு, தங்குமிடம் அனைத்தும் நிறுவனத்துக்குள்ளேயே வழங்கப்படுவதால், குற்றச் செயலில் ஈடுபட்டு வேலைக்கு வருவோர், எளிதில் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதில்லை.

கடந்த 2007-ல், திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் ஆதரவாளர்களுடன் தமிழக நக்ஸல் இயக்கத் தலைவர் சுந்தரமூர்த்தி தங்கியிருந்து, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவர்களை கைது செய்த கியூ பிரிவு போலீஸார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

அடையாளச் சான்று

பொதுவாகவே, பனியன் நிறுவனங்களில் குடும்பப் பின்னணி, பின்புலம் தெரியாமல் எந்தவித அடையாளச் சான்றுகளும் இன்றி வேலைக்குச் சேர்ப்பதால், தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை முறைப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஜூன் 15 கெடு

திருப்பூரில் மாவோயிஸ்ட் தம்பதியர் இரண்டரை ஆண்டு காலம் தங்கியிருந்தது குறித்து மாநகரக் காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாயி கூறும்போது, “திருப்பூர் மாநகரில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், ‘வீட்டு வாடகைதாரர்கள் தகவல் படிவம்’ வரும் 15-ம் தேதி முதல் ஜூன் 15 வரை, அந்தந்தப் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் வழங்கப்படும். இதனை வீட்டு உரிமையாளர்கள் பெற்று, குடியிருப்பவர்கள் குறித்த தகவல்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x