Published : 21 May 2014 09:21 PM
Last Updated : 21 May 2014 09:21 PM
நரந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கிறது.
தாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.
இலங்கையின் சிங்கள அரசு இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த்தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் மாபாவி இராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் இராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு இராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.
எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, புது தில்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.
எனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, இராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை, இருகரம் கூப்பி வேண்டுகிறேன்" என வைகோ கூறியுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT