Published : 29 May 2015 03:21 PM
Last Updated : 29 May 2015 03:21 PM

தருமபுரி ஏடிஎம் மையங்களில் கள்ளநோட்டு: அவதியுறும் வாடிக்கையாளர்கள்

தருமபுரி மாவட்ட ஏஎடிஎம் மையங்களில் தொடர்ந்து கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

கள்ள ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளுக்கு செல்லும்போது அனுபவம் பெற்ற பணியாளர்கள், இயந்திரங்கள் மூலம் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால், அதே வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் ஏடிஎம் மையங்கள் அத்தனை நம்பிக்கை வாய்ந்தவையாக இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் சமீபத்தில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் வட்டங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் சமீப காலமாக பலருக்கும் தாங்கள் எடுத்த நோட்டுகளுடன் கள்ளநோட்டுகள் கலந்து வந்ததாக புகார் கூறுகின்றனர். குறிப்பாக ரூ.500-க்கான கள்ளநோட்டுத் தாள்கள் தான் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபற்றி பாதிப்புக்குள்ளான பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:

ஏடிஎம் மையங்கள் மூலம் பணம் எடுக்கும்போது அதில் கள்ளநோட்டுகள் இருந்தால் எங்காவது ஓரிடத்தில் அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. அப்போது கள்ளநோட்டை கொடுத்தவர்களை வணிக நிறுவனங்கள் அல்லது வங்கி அலுவலர்கள் சந்தேகமாக பார்க்கின்றனர். காவல்துறைக்கு தகவல் செல்லும்போது உரிய விளக்கம் கொடுத்து மீள வேண்டி உள்ளது.

சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்தை இயக்கும் வங்கியில் புகார் கூறும்போது,

‘குறிப்பிட்ட ரூபாய் தாள்கள் எங்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்’ என்று கேட்கின்றனர்.

எனவே, வங்கித் தரப்பு இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். ஏடிஎம் இயந்திரத்தில் கள்ளநோட்டுக்கள் இருந்தால் அதை கண்டுபிடித்து உள்ளுக்குள்ளேயே சேகரிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தலாம்’ என்றார்.

இதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கல்லாவி போன்ற பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் இதுபோன்ற சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். ஓராண்டுக்கு முன் பென்னாகரத்தில் கள்ளநோட்டு கும்பலை போலீஸார் பிடித்து கைது செய்தனர். பாகிஸ்தானிலிருந்து கள்ளநோட்டு கொண்டுவரப்படுவதாகவும், இதற்கு பல்வேறு நெட் ஒர்க்குகள் இயங்குவதாகவும் கைதான வர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது ஏடிஎம் மூலம் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது. காவல்துறையினர் இதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணியில் உள்ள சிலருக்கு இதுபோன்ற செயல்களில் தொடர்புள்ளதாகத் தெரிகிறது. நல்ல நோட்டுக்களை எடுத்துக்கொண்டு கள்ளநோட்டுக் களை சேர்த்து விடுவதாகக் கூறப்படுகிறது. அவர்களை களையெடுத்தால் தான் ஏடிஎம் மூலம் அப்பாவி மக்கள் கள்ளநோட்டு பெற்று ஏமாறுவது தடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x