Last Updated : 14 May, 2015 06:02 PM

 

Published : 14 May 2015 06:02 PM
Last Updated : 14 May 2015 06:02 PM

விசைப்படகுகள் பராமரிப்பில் மீனவர்கள் சிரமம்: அரசிடம் மானியம் எதிர்பார்ப்பு

மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி விசைப்படகுகள் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், உபகரணங்களின் விலை உயர்வால் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். வலை, பைபர் போன்ற பொருட்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் இம்மாதம் இறுதிவரை நீடிக்கிறது.

இதை பயன்படுத்தி கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்கள் படகுகளை பராமரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடி கேள்விக்குறி

கன்னியாகுமரி மாவட்ட த்தை பொருத்தவரை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை மீன்பிடித் தளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் இல்லை என்ற ஆதங்கம் வலுத்துள்ளது.

வலை, பைபர், தங்கூஸ் போன்ற உபகரணங்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் ஜூன் மாதத்துக்குள் படகுகளை தயார் நிலைக்கு கொண்டு வருவதில் மீனவர்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.

கடந்த 4 வருடத்தில் இல்லாத அளவு விசைப்படகு உபகரணங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் நடுத்தர மீனவர்களின் மீன்பிடி தொழில் கேள்விக்குறியாக இருக்கிறது.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீனவர் சங்க செயலாளர் ஏ.ரெஜீஷ் கூறும்போது, ‘விசைப்படகுக்கு பயன்படுத்தும் வலை ரூ.100-ல் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் ரூ.450-ஆக விலை உயர்ந்துள்ளது. இதைப்போல் பைபர் தயார் செய்வதற்குரிய ரெசிம் என்ற பொருள் கிலோ ரூ.95-ல் இருந்து ரூ.130-ஆக உயர்ந்துள்ளது. மீன்பிடிக்க பயன்படுத்தும் தங்கூஸ் போன்றவற்றின் விலையும் இரட்டிப்பாகி உள்ளன.

ஒரு விசைப்படகை பராமரிக்கும் செலவு ரூ. 40 ஆயிரத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளில் ரூ.1 லட்சமாக உயர்ந்துள்ளது.

எனவே விசைப் படகுகளுக்கான உபகரண பொருட்களுக்கு வரிச்சலுகை அளிப்பதுடன் மானியமும் வழங்க வேண்டும்.

மீனவர் களுக்கான சான்றிதழ், அடையாள அட்டை வைத்திருப் போருக்கு மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x