Last Updated : 01 May, 2015 07:22 AM

 

Published : 01 May 2015 07:22 AM
Last Updated : 01 May 2015 07:22 AM

5-ம் தேதி கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா: ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்

உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கிய கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழாவின் முக்கிய விழா மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

மகா பாரதத்தில் பாண்டவர் களுக்கும், கவுரவர்களுக்கும் பாரதப் போர் மூண்டபோது, போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால் யுத்த தேவதையைத் திருப்திபடுத்த சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஓர் ஆண் மகனை பலி கொடுக்க வேண்டும். இதற்கு நாகக் கன்னிக்கும் பிறந்த அரவான் மற்றும் அர்ச்சுணன், கிருஷ்ணன் ஆகியோர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர்.

இதில் அர்ச்சுணனையும், கிருஷ் ணனையும் இழக்க முடியாது என்பதால், அரவானை பலியிட முயற்சித்தபோது, அரவான் தனது கடைசி ஆசையாக ‘திருமண வாழ்க்கையை தான் அனுபவிக்க வேண்டும்’ என்கிற ஒரு நிபந்தனை விதித்தார். ஆனால் அதற்கு எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. விடிந்தால் பலியாகப் போகும் ஒருவனை மணக்க எந்தப் பெண்தான் சம்மதிப்பாள்?

இப்படிப்பட்ட சூழலில் கிருஷ்ணன் மோகினி அவதாரம் எடுத்துவந்து, அரவானை மணந்து, அன்று இரவு அரவா னுக்கு அனைத்து சுகத்தையும் தருகிறார். மறுநாள் அரவானை பலி கொடுக்கிறார்கள். இதுதான் அரவான் எனப்படும் கூத்தாண்ட வரின் வரலாறு.

இந்த ஐதீகத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் அரவானை வழிபட டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூர், சென்னை, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உட்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே உள்ள கூவாகத்தில் அமைந்துள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து கூடுவார்கள்.

இந்தத் திருவிழா கடந்த 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அடுத்த நாள் பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் தாலி பூஜை நடைபெற்றது 23-ம் தேதி சந்துனுசரிதம் நிகழ்சியும் இரவு சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 24-ம் தேதி பீஷ்மர் பிறப்பும் 25-ம் தேதி தர்மர் பிறப்பும், 26-ம் தேதி பாஞ்சாலி பிறப்பும், 27-ம் தேதி பகாசூரன் வதமும், 28-ம் தேதி பாஞ்சாலி திருமணமும், நேற்று கூத்தாண்டவர் பிறப்பும் நடைபெற்றது. இன்று ராஜசூய யாகம் நடைபெற உள்ளது.

மே மாதம் 1-ம் தேதி விராடபர்வம் என்.தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் வெள்ளிக் கால் நடும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கிருஷ்ணன் தூதும், அரவான் பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாயணம், கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவுள்ளன.

வரும் 5-ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு நடைபெறவுள்ள சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சிதான் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

இதில் கலந்துகொள்ளத்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்க்கணக்கான திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலுக்கு வந்து குவிவார்கள்.

இவ்வாறு வரும் திருநங்கைள் கூத்தாண்டவர் கோயிலின் முன்பாக பூசாரிகளின் கையால் தாலி கட்டிக்கொள்வது வழக்கம். அதன் பிறகு இரவு முழுவதும் அவர்கள் ஆடிப் பாடி மகிழ்வார்கள். இந்த விழாவில் வேண்டுதலின் பேரில் சில அண்களும் பூசாரிகளிடம் தாலி கட்டிக் கொள்வார்கள்.

மே-6ம் தேதி கோயிலின் வடபுறத்தில் சகடையில் 30 அடியுள்ள கம்பம் நட்டு, அதில் வைக்கோல் பிரி சுற்றப்படும். இதில் அரவாணின் புஜங்கள், மார்பு பதக்கம் பொருத்தப்பட்டு அரவான் உருவம் எழுப்பப்படும். அதன் பின் தேரோட்டம் நடக்கிறது.

இந்தத் தேரோட்டத்தை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு வடம் பிடித்து தொடங்கி வைக்கவுள்ளார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலின் பேரில் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் வேண்டுதலின்பேரில் விளைந்த காய்கறிகளையும், தானி யங்களையும் அரவான் மீது வீசி, கற்பூரம் ஏற்றி வணங்குவார்கள். திருநங்கை களும், பக்தர்களும் பூக்களை பந்து பந்தாக அரவான் உருவத்தின் மீது வீசுவார்கள். அப்போது திருநங்கைகள் புது மணப்பெண்களைப் போல் ஆடை, அணிகலன் அணிந்துகொண்டு அரவானைச் சுற்றி வந்து கும்மி அடித்து பாடி மகிழ்வார்கள். இதைத் தொடர்ந்து அவராண் தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டவுடன் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஒப்பாரிவைத்து அழ ஆரம்பித்து விடுவார்கள். வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு தேரை பின்தொடருவார்கள். தேர் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலுக்கு சென்றடையும்.

அங்கு அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். உடனே திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிவார்கள். நெற்றியில் உள்ள பொட்டை அழிப்பார்கள். பூசாரிகள் திருநங்கைகள் கையில் இருக்கும் வளையல்களை உடைப்பார்கள். தாலிகளை அறுத்தெறிவார்கள். அப்போது திருநங்கைகள் அழுது புலம்பி ஒப்பாரி வைப்பார்கள். பின்னர் கிணற்றில் தலைமூழ்கி வெள்ளாடை அணிந்து விதவை கோலம் பூண்டு சோகமயமாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள்.

இவ்விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, திருக்கோவிலூர், விருத்தாசலம், பண்ருட்டி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்து வசதி செய்யப்படவுள்ளது. பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக போலீஸார் பெரிய செவலை ரோடு, பரிக்கல் ரோடு, பிள்ளையார்குப்பம் ரோடு, இருந்தை ரோடு ஆகிய ரோடுகளின் வழியே வரும் வாகனங்கள் நிறுத்த அந்தந்த ரோடுகளிலேயே வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மே-5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற வுள்ள திருவிழாவுக்கு நாடு முழுவது மிருந்து ஆயிரக்கணக்கான திரு நங்கைகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x