Last Updated : 11 May, 2015 05:24 PM

 

Published : 11 May 2015 05:24 PM
Last Updated : 11 May 2015 05:24 PM

கார்பைடு கல் மாம்பழங்கள் எச்சரிக்கை: சுவை இருக்காது, உடலுக்கு தீங்கானது

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப் படுவது குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‘தடை செய்யப்பட்ட கார்பைடு கல் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்க வேண்டாம்’ என, வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சுண்டி இழுக்கும்

மே மாதத்தில் மாம்பழம் சீசன் தொடங்கி விடும். கடைகளில் வகை வகையான மாம்பழங்கள் பார்வையாளர்களை சுண்டி இழுக்கும். முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழ வகையாகும். எனவே, மாம்பழ வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.

அதேநேரத்தில் செயற்கை கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. பல்லாயிரம் டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆண்டுதோறும் அழிக்கப்படுகின்றன.

வரத்து அதிகரிப்பு

தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் கடந்த சில தினங்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. அனைத்து பழக்கடைகளிலும் வகை, வகையான மாம்பழங்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. மக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். அதேநேரத்தில் கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்கவைக்கப்படுவது குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நிறத்தை மாற்றும் கல்

வெல்டிங் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கால்சியம் கார்பைடு என்ற கல்லை சிறு துண்டுகளாக உடைத்து காகிதங்களில் சுற்றி மாங்காய்களுக்கு நடுவே வைத்துவிடுவார்கள். அடுத்த 3 முதல் 6 மணி நேரத்தில் மாங்காய்கள் அனைத்தும் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதுதான் செயற்கை கல் மூலம் பழுக்க வைக்கும் முறை. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி இது தடை செய்யப்பட்ட முறை.

இந்த கால்சியம் கார்பைடில் இருந்து அசட்டலின் என்ற வாயு வெளியாகி மாம்பழத்தை பழுக்க வைக்கிறது. அதாவது மாம்பழத்தின் நிறத்தை அது மாற்றும். தன்மையை கெடுத்துவிடும்.

கால்சியம் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பார்க்க மட்டுமே பளிச்சிடும். ஆனால், சுவை இருக்காது. பழத்தில் இனிப்பு இருக்காது. அதுமட்டுமின்றி உடல் நலத்திற்கும் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும் என்கிறார், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட மாவட்ட நியமன அலுவலர் எம். ஜெகதீஷ் சந்திரபோஸ்.

புற்றுநோய் அபாயம்

அவர் மேலும் கூறும்போது, ‘கால்சியம் கார்பைடு கல்லில் இருந்து வெளியாகும் அசட்டலின் வாயு மாம்பழத்திற்குள் ஊடுருவி சென்றுவிடுகிறது. இந்த மாம்பழத்தை சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

உடனடியாக வயிற்று வலி உண்டாகும். தொடர்ந்து வாந்தி, மயக்கம், வயிற்றுப்புண் போன்றவை ஏற்படும். மேலும், வேதியியல் மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மாமரத்தில் சுரக்கும் எத்திலின் என்ற ஹார்மோன் மூலம் தான் மாம்பழங்கள் மரத்தில் இயற்கையாக பழுக்கின்றன. எனவே, அதே எத்திலின் திரவத்தை மாங்காய்களில் தெளித்து அவைகளை செயற்கையாக பழுக்க வைக்கலாம். இந்த முறை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி இது அனுமதிக்கப்பட்ட முறைதான்.

ரசாயன கடைகளில் எத்தரால் என்ற திரவம் கிடைக்கிறது. இந்த திரவத்தின் விலை அதிகம் கிடையாது. 1 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி. எத்தரால் திரவத்தை கலந்து அதனை மாங்காய்கள் மீது தெளித்து, அறையில் வைத்து பூட்டி வைத்தால் போதும். அதில் இருந்து எத்தலின் வாயு வெளியேறி மாம்பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைத்துவிடும். ஆனால், இந்த முறையில் மாம்பழங்கள் பழுக்க 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை ஆகும். இந்த முறையில் மாங்காய்களின் நிறம் மாறுவதுடன், சுவையும் அப்படியே இருக்கும். உடல் நலத்திற்கு எந்த தீங்கையும் விளைவிக்காது.

எளிதில் கண்டுபிடிக்கலாம்

ஆனால், கார்பைடு கல் வைத்தால் 6 மணி நேரத்தில் பழுத்துவிடும். விரைவாக பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வியாபாரிகள் சிலர் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கின்றனர். வாங்கும் மக்களின் உடல் நலத்தை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை மக்கள் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். மாம்பழங்களின் மீது பெரிய அளவில் கறுப்பு புள்ளிகள் இருக்கும். மாம்பழங்களை தொட்டு பார்த்தால் சூடாக இருக்கும். தோல் மட்டும் பழுத்தது போல மஞ்சளாக இருக்கும். உள்ளே வெட்டி பார்த்தால் பழுத்திருக்காது, சுவையும் இருக்காது. மேலும், கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2 நாட்களில் கெட்டு போய்விடும்.

திடீர் சோதனை

இதுதொடர்பாக வியாபாரிகளிடம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். எத்திலின் மூலம் பழுக்க வைத்தால் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி வருகிறோம். அனைத்து பழ குடோன்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x