Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM
தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட பலரும் போட்டி போட்டு சீட் கேட்கும் நிலையில், பூத் ஏஜெண்டுகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில், கோஷ்டிப் பிரச்சினை காரணமாக பல இடங்களில் தேர்தல் கமிட்டியில் பெயர்கள் சேர்க்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
இதனால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது அந்தக் கட்சி. பிரச்சாரம், வேட்புமனுத் தாக்கல் போன்ற பல்வேறு பணிகள் ஒருபுறமிருக்க, வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் பூத் ஏஜெண்டுகள் அடங்கிய பூத் கமிட்டி அமைக்கும் பணிகளிலும் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாய் ஈடுபட்டுள்ளன.
சிறிய கட்சிகளெல்லாம், தங்களது கூட்டணியிலுள்ள பெரிய கட்சியினரை, பூத் ஏஜெண்டுகளாக சேர்த்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் திமுகவினரே பெரும்பாலும் பூத் ஏஜெண்டுகளாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதேபோல் பாஜக-வில் அதிகபட்சமாக தேமுதிக-வினரும், பாமக-வினரும் பூத் ஏஜெண்டுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருசில தொகுதிகளில் மதிமுக-வினர் அதிகளவில் பூத் ஏஜெண்டுகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில், பெரும்பாலான தொகுதிகளுக்கு பூத் ஏஜெண்டுகள் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணிக்குழுவில் இடம்பிடிக்க ஒவ்வொரு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் போட்டி போடுகின்றனர். ஆனால் பூத் ஏஜெண்டுகளாவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் கட்சி சார்பற்ற நபர்களையாவது, பூத் கமிட்டி ஏஜெண்டுகளாக்க காங்கிரஸ் வட்ட நிர்வாகிகளுக்கு மாவட்டத் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஒருவர் கூறியதாவது:
காங்கிரஸில் உள்ள அனைத்து கோஷ்டிகளிலும் தேர்தலில் நிற்க கடுமையான போட்டி உள்ளது.
ஆனால் தேர்தல் பணியாற்ற ஆட்கள் கிடைப்பதில்லை. எங்கள் கட்சியில் தொண்டர்களைவிட நிர்வாகிகள் அதிகமாக உள்ளதால், தேர்தல் பணிக்குழு பொறுப்புக்கு வரத்தான் பெரும்பாலும் ஆசைப் படுகின்றனர். ஆனால், பூத் ஏஜெண்டுகளாக வருவதற்கு தயங்குகின்றனர். பூத் ஏஜெண்டுகளில் பெயர்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்து, அடையாள அட்டை பெற வேண்டும். ஆனால் ஆட்களைப் பிடிப்பதுதான் மிகக் கடினமாக உள்ளது.
திமுக, அதிமுக கூட்டணிகளில் இருந்தபோது, பெரும்பாலும் அவர்களே பூத் ஏஜெண்டுகளாக இருப்பர். அதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல்களில் இந்தப் பிரச்சினை எழுந்ததில்லை.
அஞ்சும் காங்கிரஸார்
இப்போது தனியாக நிற்பதால் காங்கிரஸ் சார்பில், பூத்களில் வந்து பணியாற்ற பலரும் தயங்குவதுடன் அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்படுவோமோ என அஞ்சுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மத்திய சென்னை மாவட்டத்தில் தங்களை தேர்தல் பணிக்குழுவில் சேர்க்க வில்லை என்று கூறி, சத்தியமூர்த்தி பவனில் சேத்துப்பட்டு பகுதி காங்கிரஸார் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை நிர்வாகிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT