Published : 26 May 2015 07:19 AM
Last Updated : 26 May 2015 07:19 AM

அகதிகள் முகாம் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி

புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர்கள் 55 பேருக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், தமிழக அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு மருத்துவம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. ஆண்டுதோறும் முகாம்களில் உயர் கல்வி பயிலும் 1,010 மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்கி வருகிறது.

நிகழ் கல்வியாண்டில் திருவள்ளூர் மாவட்டம் புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இலங்கை அகதிகள் முகாம்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்தது.

அதன்படி, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் சார்பில் முகாம் மாணவர்கள் 55 பேருக்கு, ரூ. 2,32,500 கல்வி உதவித் தொகையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.

ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகப் பிரதிநிதிகள் சக்காரியாஸ், பத்மநாபன், சுரேஷ்குமார் மற்றும் கும்மிடிப்பூண்டி முகாம் தலைவர் சிவகுமார், செயலாளர் சாகுல்ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x