Published : 26 May 2015 04:13 PM
Last Updated : 26 May 2015 04:13 PM

வேலூரில் அம்மா உணவகங்களில் அலைமோதிய கூட்டம்: 1 மணி நேரத்தில் விற்பனை முடிந்தது

வேலூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அம்மா உணவகங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. ராணிப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் உணவு விற்பனை நடந்தது.

தமிழ்நாட்டில் கட்டி முடிக்கப்பட்ட 201 புதிய அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் திறந்து வைத்தார். காலையில் ரூ.1-க்கு 1 இட்லி, மதியம் ரூ.5-க்கு சாம்பார் சாதம் மற்றும் ரூ.3-க்கு தயிர் சாதம் விற்பனை நேற்று முதல் தொடங்கியது.

நேற்று காலை 6.30 மணியில் இருந்தே அம்மா உணவகத்தில் இட்லி சாப்பிட ஏராளமான மக்கள் காத்திருந்தனர். விற்பனை தொடங்கியதும் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள் முண்டியடித்துக்கொண்டு இட்லி வாங்கினர்.

ஒவ்வொரு அம்மா உணவகங் களிலும் மகளிர் குழுக்கள் உதவியுடன் 1,200 இட்லிகள் தயார் செய்யப்பட்டது. ஒரு பிளேட்டில் 4 இட்லி வீதம் விற்பனை செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்குள் அம்மா உணவகங்களில் தயார் செய்யப்பட்ட 1,200 இட்லியும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதேபோல, பகல் 12 மணிக்கு 300 சாம்பார் சாதம், 300 தயிர் சாதம் வீதம் தயாரிக்கப்பட்டது. 1 மணி நேரத்தில் மதிய உணவு விற்பனையானது.

ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் போலீஸார் உதவியுடன் கூட்டத்தை கட்டுப்படுத்திய பிறகே மதிய உணவு விநியோகம் செய்தனர்’’ என தெரிவித்தார்.

அதேபோல, குடியாத்தம் அம்மா உணவகத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமமாக இருந்தது என்று நகராட்சி தலைவர் அமுதா தெரிவித்தார்.

அதிகாரிகள் கூறும்போது, ‘‘ மதிய உணவு விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்தில் எல்லாம் தீர்ந்துவிட்டது. அம்மா உணவகத்துக்கு உள்ள வரவேற்பு காரணமாக, பொதுமக்கள் அனைவருக்கும் உணவு வழங்கமுடிய வில்லை’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x