Published : 28 May 2014 10:32 AM
Last Updated : 28 May 2014 10:32 AM
இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான அரசு உயர் அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப் படுகிறது. பொதுப்பிரிவினர் 4 முறையும் (அட்டெம்ட்), ஓபிசி வகுப் பினர் 7 தடவையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.
வயது வரம்பு, வாய்ப்புகளில் சலுகை
இந்நிலையில், நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடி மாற்றங் கள் கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி, பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், வயது வரம்பில் கூடுதலாக 2 ஆண்டுகளும் சலுகை வழங்க யூபிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், பொதுப்பிரிவினர் 32 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுதலாம். அத்துடன் அவர்கள் 6 முறை முயற்சி செய்யலாம். அதேபோல், ஓபிசி வகுப்பினர் 35 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுத முடிவதுடன் 9 முறை முயற்சிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் 37 வயது வரை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடியும். கூடுதலாக 2 வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 31-ல் தேர்வு அறிவிப்பு
மேற்கண்ட மாற்றங்கள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தேர்வு தொடர்பான அறிவிப்பு மே 31-ம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வு முறையிலோ, தேர்வுக்கான பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.
தற்போது முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக கோவையிலும் முதல்நிலைத்தேர்வு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. கோவை மையம் இடம்பெறுமா, இல்லையா என்பது மே 31-ம் தேதி வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கையில்தான் தெரியும்.
கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம்
சிவில் சர்வீசஸ் தேர்வில் கூடுதலாக 2 வாய்ப்புகள் மற்றும் 2 ஆண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்படுவது குறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மைய இணை பேராசிரியை பி.பிரேம்கலா ராணி கூறியதாவது:
அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்படுவதால் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் குறிப்பாக விளம்பு நிலையில் இருப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர்.
இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் பெரும் வரப்பிரசாத மாக இருக்கும். அதேபோல், சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து தாமதமாக விழிப்புணர்வு கிடைக்கப் பெற்று, தேர்வுக்கு படித்து வரும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் இந்தச் சலுகைகள் பெரும் வாய்ப்பாக இருக்கும்.
இவ்வாறு பிரேம்கலா ராணி கூறினார்.
திடீர் மாற்றத்துக்கு காரணம்
சென்னை ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகடமி இயக்குநர் டி.சங்கர் கூறியதாவது:
கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். 2 விருப்பப் பாடங்கள் என்பது ஒன்றாக குறைக்கப்பட்டு பொது அறிவுத்தாள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டது.
ஏற்கெனவே, தொடர்ந்து பல பழைய தேர்வுத் திட்டத்தில் படித்துவந்த மாணவர்களுக்கு மெயின் தேர்வில் செய்யப்பட்ட திடீர் மாற்றங்களை எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. இதைச் சமாளிக்கும் வகையில் தேர்வெழுத கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதுடன், வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது கடைசி வாய்ப்பு, வயது வரம்பில் கடைசி நிலையிலும் இருக்கும் மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். கிராமப்புற இளைஞர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு தாமதமாக ஏற்படுவதால், தற்போது அளிக்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
இவ்வாறு சங்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT