Last Updated : 25 May, 2015 10:21 AM

 

Published : 25 May 2015 10:21 AM
Last Updated : 25 May 2015 10:21 AM

பாலாற்றை மீட்டெடுக்க நதிகளை இணைப்பதுதான் தீர்வா?

தொழிற்சாலைக் கழிவுகளால் மாசடைந்து பாழான பாலாற்றை மீட்க நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வேலூர் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது சந்தேகமாகவே உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தொடங்கி ஆந்திரா வழியாக தமிழகத்தின் வாணியம்பாடி தாலுகாவில் நுழையும் பாலாற்றின் மொத்த நீளம் 348 கிலோ மீட்டர் ஆகும். இதில் ஆந்திராவில் மட்டும் 33 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

பாலாற்றை மீட்டெடுக்க 2 விதமான நதிகள் இணைப் புத் திட்டங்கள் முன்வைக்கப்படு கின்றன. இதுகுறித்து வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.பி. எம்.அப்துல் ரகுமான் நம்மிடம் சில விஷயங் களைப் பகிர்ந்துகொண்டார்.

தென்பெண்ணை இணைப்பு

“1982-ம் ஆண்டு தேசிய நீர் மேம்பாட்டு முகமை, அனைத்து மாநிலங்களின் ஆலோசனை களைப் பெற்று 34 நதிகள் இணைப் புத் திட்டத்தை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதில், தமிழகத்தில் 4 நதிகள் இணைப்புத் திட்டங்கள் இடம்பெற்றன. அதில் ஒன்றுதான் தென்பெண்ணை-பாலாறு இணைப்பு.

2011-ம் ஆண்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை சாத் தியக் கூறு அறிக்கையில், ஏற் கெனவே உள்ள கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து 55.7 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓர் இணைப்பை ஏற்படுத்தி அதனை பாலாற்றுடன் இணைக்க வைக் கலாம் என்று கூறியிருந்தது. இதன் மூலம் பாலாற்றுப் படுகையில் நிலத்தடி நீரை மேம்படுத்த முடியும் என்றும், அவ்வாறு செய்வதால் சுமார் 11,870 ஹெக்டேர் அளவுக்கு நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் பணிகள் 2012-13ல் தொடங்கி, வரும் ஜூலை மாதத்துக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேத்ராவதி-பாலாறு இணைப்பு

கர்நாடக மாநிலத்தில் மேற்கு நோக்கி பாய்கிற நேத்ராவதி நதியில், சுமார் 2 ஆயிரம் டி.எம்.சி. நீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது.

சிக்பெல்லாபூர் மற்றும் கோலார் மாவட்டங்களின் நீர்த் தேவைக்காக, நேத்ராவதியில் இருந்து 10 டி.எம்.சி. நீரை எடுத்துச் செல்ல கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தை சற்று விரிவாக்கி பாலாற்றுடன் இணைத்தால், சுமார் 100 டி.எம்.சி. நீரைக் கொண்டுவர முடியும்.

நதிகளை மத்திய அரசு பட்டியலிலோ, பொதுப் பட்டிய லிலோ சேர்த்தால்தான் இந்த நதிகள் இணைப்புத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்" என்றார் அப்துல் ரகுமான்.

சாதகமா, பாதகமா?

இந்த இணைப்புத் திட்டங்கள் குறித்து 'மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' நிறுவனத்தின் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறியதாவது:

நதிகள் இணைப்பு சாத்தியமா என்பதைவிட, தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசு பாட்டை தடுக்க முடியுமா என்று பார்ப்பதுதான் சிறந்தது. காரணம், என்னதான் நதிகளை இணைத்தாலும், மீண்டும் அங்கே கழிவு நீரைக் கொண்டு வந்து வெளியேற்றினால், நிலைமை இன்னும் மோசமாகவே செய்யும்.

தவிர, தென்பெண்ணை நதியில் இருந்து பெரிய அளவில் உபரி நீர் கிடைக்காது. அந்த ஆற்றில் எப்போதாவதுதான் வெள்ளம் வரும். அவ்வாறு வெள்ளம் வந்தால் நதிகள் இணைப்புக்கு ஏற்படுத்தப்படுகிற அந்த இணைப்பு வழியின் மூலம் நீர் வந்து பாலாற்றை அடையும். அந்த வெள்ளம் ஏற்பட ஐந்து ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோகூட ஆகலாம். அதுவரை அந்த இணைப்பு வழியைத் தொடர்ந்து பராமரித்தால் தான், வெள்ளம் வரும் காலங்களில் நீரை எடுத்துவர அது பயன்படும்.

அவ்வளவு காலமும் அதனைப் பராமரிப்பதற்கு ஏற்ப நம்மிடம் வளங்கள் இருக்கின்றனவா என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

(கட்டுரையாளர், தொழிற்சாலை மாசுபாடு குறித்து ஆய்வு செய்வதற் காக டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 19-வது ஊடக நல்கை (Centre for Science & Environment, CSE - 19th Media Fellowship) பெற்றவர்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x