Published : 19 May 2015 06:25 PM
Last Updated : 19 May 2015 06:25 PM
விசாரணைக் கைதியை சினிமாவுக்கு அழைத்துச் சென்ற விழுப்புரம் போலீஸார் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இரு சக்கர வாகனங்களைத் திருடும் கும்பலைச் சார்ந்தவர் என சொல்லப்பட்ட மதன் என்பவரை கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு போலீஸார் விசாரித்து வந்தனர். மணி 10.30 ஆனதும், காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது என்பதால், கை விலங்குடன் மதனை ஜீப்பில் ஏற்றி ரவுண்ட்ஸ் வந்தனர்.
அப்போது முருகா தியேட்டரில் '36 வயதினிலே' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அழகேசன், தலைமைக் காவலர் ஞானபிரகாசம், ஜீப் டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும், விசாரணைக் கைதியுடன் படம் பார்த்தனர்.
கைவிலங்குடன் மதன் படம் பார்ப்பதைக் கண்ட பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் தகவலைப் பரப்பினர். இத்தகவல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர நாயர், டி.எஸ்.பி. சீத்தாராமன் ஆகியோரருக்கு சென்றது.
இதனால் விசாரணை நடத்தப்பட்டது. விழுப்புரம் நகர காவல்நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அழகேசன், தலைமைக் காவலர் ஞானபிரகாசம், ஜீப் டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்டது தெரிய வந்ததும், மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
போலீஸ் தரப்பில் விசாரித்தால் ''மதனின் கூட்டாளிகள் அங்கு படம் பார்க்க வருவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனால்தான் மதனை அழைத்துச் சென்றோம்.
மதனின் கூட்டாளிகள் வரவில்லை. நாங்கள் மதனுக்கு கைவிலங்கு போட்டதால் பொதுமக்கள் கண்டுபிடித்துவிட்டனர். மதனுக்கு கைவிலங்கு போட்டதுதான் நாங்கள் செய்த தவறு'' என்று கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT