Published : 26 May 2015 10:04 PM
Last Updated : 26 May 2015 10:04 PM

ஆட்சி மாற்றம் என்ற பெயரில் ஏமாற்றம் தந்த மோடி அரசு: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கடந்த ஓராண்டில் மக்களுக்கு ஏமாற்றத்தையும் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவேன் எனக் கூறி கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளார். 12 மாதங்களில் 11 அவசர சட்டங்களை கொண்டுவந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்போம் என வாக்குறுதி அளித்தவர்கள், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயிகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டும் வகையில் பாஜகவினர் பேசிவருகின்றனர். காஷ்மீரில் அரசியல் ஆதாயத்துக்காக பிரிவினைவாத சக்திகள் தலைதூக்குவதை மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. பல்வேறு மாநிலங்களில் தலைதூக்கியுள்ள மாவோயிஸ்ட்கள், நக்சலைட்களை ஒடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் அவலம் தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. 75 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்காக கொண்டுவரப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும், போதிய நிதி ஒதுக்காமல் மகளிர் சுயஉதவிக் குழுக்களையும் முடக்க நினைக்கின்றனர்.

முக்கிய சட்டங்கள் நிறைவேறும்போது பிரதமர் நாடாளுமன்றத்தில் இருப்பதில்லை. ஏற்கெனவே இருக்கும் திட்டங்களில் பெயர்களை மாற்றுவதிலும், திட்டங்களை முடக்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இந்த ஓராண்டில் புதிய திட்டங்கள் எதையும் வகுக்கவில்லை. தேர்தலின்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, இப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை குறைக்கும் வகையில் பேசி வருகிறார். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தையும், சுமையையும் மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x