Published : 30 May 2015 01:47 PM
Last Updated : 30 May 2015 01:47 PM

ஊரக வளர்ச்சித் துறையினரிடம் மனஅழுத்தம்: முதல்வர் தலையிட கோரிக்கை

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கையை எடுக்க வேண்டும் என சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: நூறு நாள் வேலைக்கு ஊதியத்தை குறைக்காமல் வழங்க வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அதேநேரம், தொழிலாளர்கள் செய்யும் பணி மிகவும் குறைவாக உள்ளதென சமூக தணிக்கை மூலம் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் ஊதியத்தில் பிடித்தம் செய்வதுடன், தண்டனையும் வழங்கப்படுகிறது.

இத்திட்ட பணியை விரைவாக பதிய முடியாமல் கணினி உதவியாளர்கள் அவதிப்படுகின்றனர். வீடுகள் கட்டித்தருவதற்கு கால அவகாசம் வழங்கப்படுவதில்லை. தனிநபர் கழிப்பறைகள் அனைத்தும் நடப்பு நிதியாண்டிலேயே கட்டவும், வாராந்திர அறிக்கை தர வேண் டும் என்றும் துறையின் உயர் அலுவலர் கேட்கிறார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விடுத்து பல்லாயிரக்கணக்கான கழிப்பறைகளை உடனே கட்டும்படி நிர்பந்திப்பதை செயலாக்க முடியாது.

விருதுநகர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் வாரந்தோறும் இயக்குநரை சந்தித்து கழிவறை திட்டப்பணி முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேண்டும் என நிர்பந்தப்படுத்தப்படுகிறார். வாட்ஸ் அப், குறுந்தகவல் மூலம் திட்ட இயக்குநர்களுக்கு தொல்லை கொடுக்கப்படுகிறது. இதற்கு நள்ளிரவிலும் பதில் அளிக்க வேண்டியுள்ளது. பொறியியல் பிரிவினர் முதல் ஊராட்சி செயலர் வரை இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

உயர் அதிகாரியின் நடவடிக்கையால் மாவட்டங்களிலும் இரவுநேர கூட்டங்கள், விடுமுறை தின ஆய்வுக்கூட்டங்கள், குற்றச் சாட்டுகள், பணியிடை நீக்கம் என கடும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து வரும் ஜூன் 6-ம் தேதி திருவாரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுவில் விவாதிக்கப்படும். அரசின் முக்கிய திட்டங்களை நிறைவேற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மனஅழுத்தமின்றி பணியாற்ற உயர் அதிகாரிகளின் அணுகுமுறையில் மாற்றம் உருவாக வேண்டும். இதற்கு முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x