Published : 31 Mar 2014 09:45 AM
Last Updated : 31 Mar 2014 09:45 AM
தேர்தல் அலுவலர்களிடம் தகராறு செய்ததாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரம் மோகன்ராஜ் மீது ஓமலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேமுதிக மாநில இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கட்சியினர் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக் கிழமை ஓமலூரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.
அதனால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது. அதை தேர்தல் அலுவலர் கற்பகவள்ளி தலைமையிலான அலுவலர்கள் வீடியோ கிராபர்கள் மூலம் பதிவு செய்தனர். மேலும், கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்குள்ளும் நுழைய முயன்றனர். அவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அழகாபுரம் மோகன்ராஜ், எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதுதொடர்பாக கோட்டைமேடு கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரம் மோகன்ராஜ் மீது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், தேர்தல் விதிமுறை மீறல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT