Published : 25 May 2015 10:25 AM
Last Updated : 25 May 2015 10:25 AM

‘‘எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை’’ - டிஎம்எஸ் 2-ம் ஆண்டு நினைவு தினத்தில் மனம் நெகிழ்கிறார் சீடர் மகாதேவன்

மே 25 - பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய டிஎம்எஸ் 91-வது வயதில் மரணத்தை தழுவினார். அவரோடு இருந்த நாட்கள் குறித்தும் இறுதி நாட்களில் அவருக்குள் அலையடித்துக் கொண்டிருந்த நினைவுகள் குறித்தும் இங்கே பேசுகிறார் அவரது சீடர் மகா தேவன்.

‘‘மதுரையைச் சேர்ந்த எங்கள் குடும்பம் ஃபவுன்டன் பேனாவுக்கு இங்க் தயாரிக்கும் தொழிலில் பிரபலமாக இருந்தது. தொழில் அபிவிருத்திக்காக 1946-ல் எங் கள் குடும்பம் சேலத்துக்கு இடம் பெயர்ந்தது.

எனது அப்பா பாகவதர் ஜி.எஸ்.ராமமூர்த்தியும் ஒரு இசைக் கலைஞர். ஒருமுறை டிஎம்எஸ் ஐயா, பாடல் பதிவுக் காக சேலம் மாடர்ன் தியேட்டர் ஸுக்கு வந்தபோது அப்பாவுக்கு அறிமுகமானார்.

அதிலிருந்து எப்போது சேலம் வந்தாலும் ஐயா எங்கள் வீட்டில் தான் தங்குவார். பாகப்பிரிவினை படம் வரைக்கும் இது நீடித்தது. அதற்கு பிறகு, ‘என்னைப் பார்க்க நிறையப் பேர் வருகிறார்கள். இது உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். நீங்கள் உத்தரவு கொடுத்தால் லாட்ஜில் தங்கிக் கொள்கிறேன்’ என்று அப்பாவிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சேலத்திலுள்ள கோயமுத்தூர் லாட்ஜில் தங்க ஆரம்பித் தார்.

பி.யு.சி. படிக்கும்போது ஒரு முறை நானும் ரெக்கார்டிங் தியேட் டருக்குப் போயிருந்தேன். அன் றைக்கு, ‘ஓராயிரம் பார்வையிலே..’ பாடல் ரெக்கார்டிங். பத்து முறை ரீ டேக் பாடவைத்து ஓகே செய் தார் இசையமைப்பாளர் வேதா. ஆனாலும் ஐயாவுக்கு திருப்தி இல்லை.

பதினோராவது முறையாகவும் பாடிய பிறகுதான் திருப்தி யானார். 91 வயது வரை அவரி டம் இந்த அர்ப்பணிப்பும் தொழில் பக்தியும் இருந்தது’’ என்ற மகா தேவன், தொடர்ந்து டிஎம்எஸ்ஸின் நினைவுகளில் மூழ்கினார்.

‘‘1972-ல் மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் பேராசிரியராக சேர்ந் தேன். விடுமுறை நாட்களில் டிஎம்எஸ் ஐயாவைப் பார்க்கச் சென்னைக்கு வந்துவிடுவேன். மயிலாப்பூர் ரெங்காச்சாரி சாலையில் ஐயா அலுவலகம். ஓய்வான நேரங்களில் அங்கு எனக்கு சங்கீதம் சொல்லிக் கொடுப் பார்.

மாலையில் ’பீச்’சுக்குப் போவோம். தண்ணீர் இருக்கிற பக்கம் வாயை திறந்து வைச்சுக் கடா.. உப்புக் காத்து தொண்டையில பட்டா குரல் வளமாகும்’னு சொல்லுவாரு. இப்படியேதான் அவரிடம் இசையைப் படித்துக் கொண்டேன்.

‘அர்த்தம் புரிஞ்சு பாடினாத்தான் அதைக் கேக்குறவங்களுக்கும் அர்த்தம் புரியும்’னு சொன்ன அவருக்கு இப்ப இருக்கிற இசை கலாச்சாரம் பிடிக்கல. ‘பாட்டுத் தான் இசையைச் சுமந்து வரணும். இப்பெல்லாம் இசை தான்டா பாட்டைத் தள்ளிக்கிட்டு வருது’ன்னு சொல்லுவாரு. வெளிநாடுகளில் உள்ள இசைப் பிரியர்கள் ஐயாவை தெய்வமா பார்க்கிறாங்க. அப்படிப்பட்ட இசை மேதையை தமிழக அரசு உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை. அந்த வருத்தம் அவருக்கும் இருந்தது.

கடைசி மூன்று மாதங்கள் அவருக்கு பக்கத்தில் இருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்திருக்கிறேன். ‘காலேஜ் புரொபசர் இதெல்லாம் செய்ய லாமாடா?’னு கேட்பாரு. ‘அதெல்லாம் இந்த அறைக்கு வெளியில். இங்கே நான் உங்க ளுக்கு சீடன்’னு சொல்லுவேன்.

ஒவ்வொரு நொடியிலும் இந்த உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் டிஎம்எஸ் ஐயா குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கு. ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..’ - இந்த வரிகள், எழுதிய கவியரசருக்கு மாத்திரமல்ல.. பாடிய டிஎம்எஸ் ஐயாவுக்கும் பொருந்தும்’’ உணர்ச்சிப் பிழம்பானார் மகாதேவன்.

டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலை அமைக்கக் கோரி அவரது அபிமானிகள் தமிழக அரசிடம் விண்ணப் பித்திருக்கிறார்கள். தற்போது இசைக் கச்சேரிகள் நடத்தி வரும் மகாதேவனை சிலை அமைப்புக் குழுவின் தலைவராக நியமித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x