Published : 03 Apr 2015 06:22 PM
Last Updated : 03 Apr 2015 06:22 PM

நுண்ணூட்டச் சத்துக் குறைவை போக்கி ஏழைக் குழந்தைகளைக் காக்க வேண்டும்: ராமதாஸ்

இளம் தாய்மார்கள், குழந்தைகளின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டை போக்குவதற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து, ஆய்வு செய்து அவற்றை நிகழ்கால தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''

மராட்டிய மாநிலத்திலுள்ள தானே, நந்துர்பர், பால்கர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 1274 குழந்தைகள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் உயிரிழந்துள்ளன என்ற செய்தியை படித்ததும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். விண்வெளி ஆராய்ச்சியிலும், ஏவுகணை மற்றும் அணுசக்தி தயாரிப்பிலும் வல்லரசாகி விட்டதாக உலக அரங்கில் இந்தியா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சத்து நிறைந்த உணவுக்கு வழியின்றி குழந்தைகள் உயிரிழப்பது பெரும் அவலம் ஆகும்.

இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான மராட்டியத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களின் நிலையை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் செயலாக்கத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா முழுவதும் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 2.30 கோடி குழந்தைகள் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

பெரிய மாநிலங்களில் பீகாரில் தான் 50% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மராட்டியம் தான். அம்மாநிலத்தில் 11% குழந்தைகள் மட்டுமே நுண்ணூட்டச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தகைய சூழலிலேயே அங்கு இவ்வளவு அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உயிரிழந்தால், மற்ற மாநிலங்களின் நிலை எப்படியிருக்கும் என நினைக்கவே நடுங்குகிறது.

தமிழகத்தில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் அளவில் இல்லாவிட்டாலும், மராட்டிய மாநிலத்தின் சராசரியான 11 விழுக்காட்டை விட அதிகமாகும்.

தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 18 விழுக்காட்டினர் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் தாக்கம் குறித்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இதுதவிர அண்மையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வின் படி தமிழகத்தில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 31 விழுக்காட்டினர் வளர்ச்சிக் குறைபாட்டாலும், 23 விழுக்காட்டினர் உடல் இளைப்பு குறைபாட்டாலும், 26 விழுக்காட்டினர் எடை குறைவாலும், 73 விழுக்காட்டினர் சத்துக்குறைவாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமின்றி, இளம் தாய்மார்களில் பலருக்கும் இந்தக் குறைபாடுகள் காணப்படுகின்றன.

அண்மையில் தருமபுரியிலும், சேலத்திலும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிகழ்வுகள் படம் பிடித்து காட்டுவது என்னவென்றால், தமிழகத்தில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் அளவு திருப்தியளிக்கும் நிலையில் இருக்கும் போதிலும், ஒரு சில மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக மோசமான அளவில் உள்ளது என்பதைத்தான்.

ஓர் அரசின் முதன்மையான கடமை மக்களின் நுண்ணூட்டச் சத்து, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உயர்த்துவதும், பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதும் தான் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டு விதிமுறைகளின் 47 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கும் போதிலும், தமிழக அரசு அதைச் செய்யாமல், அதற்கு நேர் எதிராக மது விற்பனை செய்வதில்தான் தீவிரம் காட்டி வருகிறது.

குடும்பத் தலைவர்களில் பலர் தங்களின் வருவாயில் பெரும் பகுதியை மது அருந்துவதற்காக செலவிடுவதால், குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க முடியாததுதான் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டுக்கான காரணங்களில் முதன்மையானது ஆகும். எனவே, தமிழகத்தில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டுமானால், முதல் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்.

அதுமட்டுமின்றி, இளம் தாய்மார்கள், குழந்தைகளின் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டை போக்குவதற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து, ஆய்வு செய்து அவற்றை நிகழ்கால தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும். இதற்கானத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியின் அளவை பல மடங்கு உயர்த்த வேண்டும். இதன்மூலம் மராட்டியத்தில் ஏற்பட்டது போன்ற சோகம் தமிழகத்தில் நடக்காமல் தடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x