Published : 14 Apr 2015 09:41 AM
Last Updated : 14 Apr 2015 09:41 AM

5.5 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பால் அதிருப்தி: போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் - 14 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5.5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து, 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினருடன் தொழிற்சங்கத்தினர் ஏற்கெனவே 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில், 6-ம் கட்ட பேச்சுவார்த்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடந்தது. இதில், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர ராவ், நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்ட குழுவினரும் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட 42 தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

பின்னர், தொழிலாளர் நலத்துறை தனித் துணை ஆணையர் அ.யாஸ்மின் பேகம் முன்னிலையில் 12-வது ஊதிய ஒப்பந்தத்தில் தொழிலாளர் மற்றும் நிர்வாகத் தரப்பினர் கையொப்பமிட்டனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் சின்னசாமி உள்ளிட்ட 28 தொழிற்சங்க நிர்வாகிகள் கையொப்பமிட்டனர். ஆனால் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, தேமுதிக, பாமக, பணியாளர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்களின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் வெளியேறினர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி பெற்று வந்த அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தின் கூட்டுத் தொகையில் 5.5 சதவீதம் கணக்கிட்டு அடிப்படை ஊதியத்தோடு சேர்த்து புதிய அடிப்படை ஊதியம் 2013 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிர்ணயம் செய்து வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,350 முதல் அதிகபட்சமாக ரூ.5,941 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

இதற்கிடையே தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று மாலை தி.நகரில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில், 5.5 சதவீத ஊதிய உயர்வுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. குறைந்த ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம் குறித்த நிலையான அறிவிப்பு இல்லாதது போன்ற காரணங்களுக்காக இன்று (14-ம்தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இதனால் அரசு பஸ்கள் இன்று ஓடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி இன்று அரசு விடுமுறை என்பதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.

பஸ்கள் ஓடும்

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர ராவ் கூறும்போது, ‘‘சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் அரசு பஸ்களை வழக்கம்போல இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதிப்பின்றி முழுமையான அளவில் பஸ்களை இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும்போது, ‘‘மொத்தமுள்ள பணியாளர்களில் 90 ஆயிரம் பேர் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பஸ்களை இயக்குவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x