Published : 03 Apr 2015 04:42 PM
Last Updated : 03 Apr 2015 04:42 PM
தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் திட்டத்தில் (என்.இ.ஆர்.பி.ஏ.பி.) வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்களை இணைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஐ.சி.ஆர். எனப்படும் நவீன தொழில்நுட்பம் மூலம் பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதி மக்களின் தகவல் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் ஒருவரது பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருவதை தடுக்கும் வகையில், வாக்காளர் அட்டை விவரங்களுடன், ஆதார் எண் விவரங்களையும் இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் கடந்த மார்ச் 25-ம் தேதி தொடங்கி ஏப்.6 வரை நடக்கின்றன. இதற்காக வட்டார அளவில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு, வீடாக விண்ணப்பங்கள் மூலம் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தேசிய வாக்காளர் சேவைக்கான www.nvsp.in என்ற இணையதளம் மூலமும், 51969 மற்றும் 199 என்ற எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது மூலமும், ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம். ஏப்.12, ஏப்.26, மே 10, மே 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
புதிய தொழில்நுட்பம்
இதில், பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் ஆதார் விவரங்களை, வாக்காளர் பட்டியலில் இணைக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.சி.ஆர். (Intelligent Character Recognition) தொழில்நுட்பம் மூலம், தகவல்களை பதிவேற்ற முடியும்.
விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடும் விவரங்களை ஸ்கேனிங் மூலமாக இத்தொழில்நுட்பம், கணினிக்கு புரியும்படி மாற்றுகிறது. வழக்கமாக, விண்ணப்பங்களில் உள்ள விவரங்களை ஆட்களே கணினிகளில் பதிவு செய்வார்கள். இதனால் ஏற்படும் பிழைகளைத் தவிர்க்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவின் இந்த ஆலோசனை, கோவை மாவட்ட ஆட்சியர் மூலம், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டம் வெற்றியடையும்பட்சத்தில் தமிழக அளவிலும், அடுத்ததாக இந்திய அளவிலும் கொண்டு செல்லப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.
புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம். (அடுத்தபடம்) ஸ்கேனிங் செயல்முறையை பார்வையிடும் மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி சார் ஆட்சியர்.
ஒரு மணி நேரத்தில் 1000 படிவம் ஸ்கேன் செய்யலாம்
சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறும்போது, ‘முதல் கட்டமாக என்.ஐ.சி மையம் மூலம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேரை இணைத்தோம். 2-ம் கட்டமாக வீடு, வீடாகத் தகவல்களை திரட்ட வேண்டியிருந்தது. தகவல்கள் பெரும்பாலும் எண்களாக இருப்பதால், பதிவேற்றுவதில் தவறு வர வாய்ப்பிருக்கிறது. எனவே, கணினி மூலம் ஸ்கேன் செய்ய ஆலோசித்து, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
அங்கு ஒப்புதல் கிடைத்தவுடன், முன்னோட்டமாக பொள்ளாச்சியில் இந்த நடைமுறை தொடங்கியுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறை. quick response code உள்ள படிவம் தயார் செய்து, இதற்கான மென்பொருளை தமிழக தேர்தல் ஆணையம் வடிவமைத்துக் கொடுத்துள்ளது. 1 மணி நேரத்தில் 1000 படிவங்களை ஸ்கேன் செய்ய முடியும்.
விண்ணப்பத்தில் பெயர், ஆதார் எண், வாக்காளர் எண், இ-மெயில் முகவரி, செல்போன் எண் உள்ளிட்டவை கேட்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, மென்பொருள் வடிவமாக அவை, சென்னையில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரகத்துக்கு அனுப்பப்படுகின்றன. அங்குள்ள ஐ.சி.ஆர். தொழில்நுட்பக் கருவி மூலம் அந்த படிவங்களை படித்து, கணினிக்கு புரியும்படி, பிழைகள் இல்லாமல் பதிவு செய்கிறது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT