Published : 24 Apr 2015 04:37 PM
Last Updated : 24 Apr 2015 04:37 PM

சாலை போக்குவரத்து, பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

மாநில அரசுகள் மட்டுமின்றி மக்களின் உரிமைகளையும் பறித்து தனியாருக்கு தாரை வார்க்கும் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு மாற்றாக சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளில் சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லாத நாடாக மாற்றவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படும் நாடு என்ற அவப்பெயரை நீண்ட காலமாக இந்தியா சுமந்து கொண்டிருக்கும் நிலையில், விபத்துக்களைத் தடுத்து அந்த அவப்பெயரை துடைத்தெறிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், இந்நோக்கத்தை எட்டுவதற்காக புதிய சட்டத்திருத்த முன்வரைவில் மத்திய அரசு முன்வைத்துள்ள திட்டங்கள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதுடன், தனியாருக்கு சாதகமாகவும், வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றன என்பது வேதனையான விஷயமாகும்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டத்தின்படி, போக்குவரத்துத்துறையில் மாநில அரசுகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும்.

வாகனங்களுக்கு வரி நிர்ணயித்தல், வரி வசூலித்தல், பதிவு செய்தல், பெர்மிட் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தேசிய போக்குவரத்து ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதனிடம் ஒப்படைக்கப்படும்.

இந்தப் பணிகளை ஆணையம் நேரடியாக மேற்கொள்ளாது. மாறாக இப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும். உதாரணமாக இப்போது வாகனங்களை பதிவு செய்யும் பணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செய்து வந்தன.

இனி இந்த அலுவலகங்கள் மூடப்பட்டு விடும். அவற்றுக்கு பதிலாக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களே இவற்றை பதிவு செய்து தரும். இதற்காக இப்போது வசூலிக்கப்படுவதைப் போல சுமார் 10 மடங்குவரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆபத்துள்ளது.

பேருந்து போன்ற போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான வழித்தட பெர்மிட்டை இனி தேசிய போக்குவரத்து ஆணையம் தான் வழங்கும். இவை ஏலம் கேட்கும் முறையில் வழங்கப்படுவதால் பெரு நிறுவனங்கள் அதிக தொகைக்கு வழித்தட பெர்மிட்டை ஏலத்தில் எடுக்கும். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களுடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் போட்டியிட முடியாது என்பதால், அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையும்; அதேநேரத்தில் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் பேருந்து உரிமையாளர்களுக்கே வழங்கப்படுவதால் பேருந்து கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிப்பதை தடுக்க முடியாது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பேருந்து பயணம் எட்டாக் கனியாகி விடும்.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இப்போதுள்ள ஓட்டுனர் உரிமங்கள் அனைத்தும் செல்லாததாகி விடும். அவற்றுக்கு மாற்றாக அடுத்த 2 ஆண்டுகளில் புதிய உரிமங்களைப் பெற வேண்டும். இந்த உரிமங்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு நடத்தி வழங்கும். இதற்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டும். இந்தியாவில் இப்போது சுமார் 30 கோடி பேர் உரிமம் வைத்திருப்பதாகவும், அவர்கள் ஒரு உரிமத்திற்கு ரூ. 5,000 வீதம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் வைத்துக் கொண்டால் உரிமம் வழங்கும் தனியார் நிறுவனங்கள் இரு ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் கொள்ளையடிக்கும்.

ஏற்கனவே உரிமம் பெற்ற மக்களுக்கு மீண்டும் ஒரு உரிமம் பெறுவது என்பது தேவையற்றது என்பதுடன், வீண் அலைச்சலையும், செலவையும் ஏற்படுத்தும். மேலும், இப்போதுள்ள உரிமங்கள் அனைத்து மாநில அரசுகளால் வழங்கப்பட்டவையாகும். அவை செல்லாது என்று அறிவிப்பது மாநில அரசுகளின் நேர்மையை சந்தேகிக்கும் செயலாகும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. சிறப்பான நிர்வாகத்திற்கு அதிகாரப்பரவல் தான் சிறந்த வழி என்பது உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

திட்டமிடலில் பிரதமரும், முதலமைச்சர்களும் சம பங்குதாரர்களாக இருக்கும் ‘டீம் இந்தியா’ உருவாக்கப்படும்; மத்திய, மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவு நிலவ செயல்திட்டம் வகுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மாறாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அனைத்தையும் தனது அதிகார வரம்புக்குள் கொண்டு வர நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முயன்று வருகிறது.

ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் பணியையையும், உரிமம் வழங்கும் நிறுவனங்களே கட்டணம் பெற்றுக் கொண்டு செய்யும் என்பதால் நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்படும். இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்து வறுமையில் வாடும் நிலை உருவாகி விடும். புதிய சட்டத்தில் பேருந்து நடத்துநர் பணி ஒழிக்கப்படுவதால் நடத்துநர் உரிமம் பெற்று வேலை செய்பவர்கள் வேலை இழக்க நேரிடும்; வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலையே கிடைக்காது. இதேபோல் வாகனக் காப்பீடு, உதிரி பாகம் தயாரிப்பு போன்றவை தொடர்பான பிரிவுகளும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். 10 லட்சம் பேருக்கு வேலை தருவதற்காகவே இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் பல லட்சம் பேர் வேலையிழப்பர்.

மாநில அரசுகள் மட்டுமின்றி மக்களின் உரிமைகளையும் பறித்து தனியாருக்கு தாரை வார்க்கும் இந்தக் கருப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 30-ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பாமக ஆதரவளிக்கும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x