Published : 06 Apr 2015 10:14 AM
Last Updated : 06 Apr 2015 10:14 AM
தமிழக – ஆந்திர வனப் பகுதியில் குண்டு காயங்களுடன் கிடந்த இளைஞர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த வரமலைகுண்டா பெரியார் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் திம்மோஜி (22). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வனப்பகுதிக்கு வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆந்திரா மாநில எல்லையோரம் ஒப்பதவாடி வனப்பகுதியில் துப்பாக்கி சூட்டில் குண்டு அடிபட்ட காயங்களுடன் திம்மோஜி மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குப்பம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்த பர்கூர் டிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் ஆகியோர் வரமலைகுண்டா கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். வேட்டையாட சென்றபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டார்களா அல்லது விலங்குகளை சுடும்போது தவறுதலாக குண்டு பாய்ந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், நக்ஸலைட்டுகள் சுட்டார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் இரு மாநில எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT