Published : 24 Apr 2015 10:48 AM
Last Updated : 24 Apr 2015 10:48 AM

சென்னையில் கற்காலத்திலேயே மனிதன் வாழ்ந்த ஆதாரம் உள்ளது: வரலாற்று ஆய்வாளர் சுரேஷ் தகவல்

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கற்காலத்திலேயே மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்று வரலாற்று ஆய்வாளர் சுரேஷ் கூறினார்.

மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் சென்னை வட்டம் சார்பில் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, 1816-ல் தாமஸ் - வில்லி யம் இரட்டை சகோதரர்களால் தொகுக்கப்பட்ட ஓவிய புத்தகம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ‘ஒளித் திரையில் ஒரு ஓவியப் புத்தகம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் கோ.லூர்துசாமி வெளியிட்டார்.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யின் 375-வது ஆண்டு விழாவும் நேற்று கொண்டாடப்பட்டது. இதை யொட்டி தயாரிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வரலாற்று ஆய் வாளரும் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான இந்திய அறக்கட்டளையின் தமிழக பிரிவு தலைவருமான சுரேஷ் வெளியிட, லூர்துசாமி பெற்றுக் கொண்டார். அஞ்சல் உறையை வெளியிட்டு சுரேஷ் பேசியதாவது:

சென்னையின் வரலாறு என்பது ஜார்ஜ் கோட்டையில் இருந்து தொடங்கியது அல்ல. கற்காலத்தில் இருந்தே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர்.

மயிலாப்பூர், எழும்பூர், கீழ்ப்பாக்கம், பல்லாவரம், பூண்டி, குடியம், அதிரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொல் பொருள் துறை நடத்திய ஆய்வில் இதற்கு பல சான்றுகள் கிடைத் துள்ளன.

பல்லாவரத்தில் கடந்த 1863-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கற்கால மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கிடைத்தன. அதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்புதான் கற்கால மனிதன் இருந்ததையே உலகம் நம்பியது. சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், கற்கால மனிதன், விலங்குகளின் எலும்புகள், சுடுமண் ஓடுகள் கிடைத்தன. அதன் பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்பட்ட ஆய்வில் பழங்கால நாணயங்கள், சுடுமண் ஓடுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சென்னை கோட்டை அருங்காட்சியக தொல்லியல் துணை கண்காணிப்பாளர் கு.மூர்த்தீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x