Last Updated : 20 Apr, 2015 03:34 PM

 

Published : 20 Apr 2015 03:34 PM
Last Updated : 20 Apr 2015 03:34 PM

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை: தமிழிசை

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

பி.டி.ஐ.-க்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் பாஜக மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது.

தேர்தலைப் பொருத்தவரை நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி எல்லாவற்றையும் நாங்கள் தனியாகவே எதிர்கொண்டோம்.

அதே கொள்கையே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். அதிமுக - பாஜக இடையே கூட்டணி உருவாகும் சூழல் இருப்பதாக சிலர் கருத்துகளை தெரிவிக்கலாம். ஆனால் அதெற்கெல்லாம் நான் பொறுப்பாக முடிடாது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தன.

இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஊழலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாற மாட்டோம். இந்நிலையில், தமிழகத்தில் பாஜக வலுவான மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது" என்றார்.

திமுகவுக்கு கண்டனம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் மத்திய அரசு நீதித்துறைக்கு நெருக்கடி அளிப்பது போன்ற நிழலை திமுக தலைவர் கருணாநிதி உருவாக்க முயற்சிக்கிறார். ஆனால், பாஜக அத்தகைய செயலில் ஈடுபடவில்லை.

கருணாநிதியின் முயற்சி கண்டனத்துக்குரியது. அவர் முன் நிறுத்த முற்படும் குற்றச்சாட்டு பொய்யானது. ஏன் நீதித்துறையே அவமதிப்பதற்கு சமமாகும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x