Published : 01 Apr 2015 02:36 PM
Last Updated : 01 Apr 2015 02:36 PM

மகாவீரர் ஜெயந்தி: ஜெயலலிதா வாழ்த்து

மகாவீரர் ஜெயந்தியை ஒட்டி தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பகவான் மகாவீரரின் உயரிய சிந்தனைகளை உலகத்தோர் உணர்ந்திடும் வண்ணம் அவர் அவதரித்த திருநாளை அகமகிழ்ந்து கொண்டாடும் சமண சமய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய “மகாவீர் ஜெயந்தி” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எவரிடமும் விருப்போ, வெறுப்போ கொள்ளாமல், மடமை, அச்சம் ஆகியவற்றை விலக்கி பற்றில்லாது வாழ்பவரே முக்தி பெற்றவர் என்றார் பகவான் மகாவீரர். பற்றே பல்வகையான துன்பங்களுக்கு அடிப்படை ஆதாரமாக அமைகிறது. ஆணவம், கோபம், வெறுப்பு, ஏமாற்றம், பழித்தல், பழி வாங்குதல் போன்ற பலவும் பற்றாலே மனிதரைப் பற்றி விடுகின்றன. இப் பற்றே இம்சையின் விதையாகவும், வேராகவும் இருப்பதால், இம்சையை விட்டு அஹிம் சையைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் பற்றை முற்றிலும் விட்டொழிக்க வேண்டும் எனப் போதித்தார் மகாவீரர்.

கொல்லாமையும் பிற உயிர்க்குத் தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை விளக்கி, அஹிம்சை நெறியை உலகிற்கு உணர்த்திய பகவான் மகாவீரரின் போதனைகளை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும்.

அறத்தையும், அஹிம்சை யையும் இரு கண்களாகப் பாவித்த பகவான் மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அவருடைய போதனைகளைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்து களை உரித்தாக்கிக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x