Published : 03 Apr 2015 08:46 AM
Last Updated : 03 Apr 2015 08:46 AM

சோதனை மேல் சோதனை வேண்டுமடா சாமி!

ஒரு ஸ்லிப், ஒரு கல்லி, ஒரு ஃபார்வார்ட் ஷாட் லெக், ஒரு பேக்வேர்ட் ஷார்ட் லெக், ஒரு மிட் ஆஃப், ஒரு மிட் ஆன் - என்னங்க உலகக் கோப்பை முடிஞ்சு பல நாள் ஆச்சு இன்னமும் அதே நினைப்பா என்று கேட்கிறீர்களா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வரும் புறநகர் பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய சுரங்கப் பாதை அருகே, கூட்டமாகப் நிற்கும் போக்கு வரத்துக் காவலர்களைப் பார்க்கும் போது இப்படித்தான் நினைவுக்கு வரும். இவர்கள் வரிசை கட்டியோ, போதிய இடைவெளி விட்டோ - ஆறேழு பேர் நிற்பார்கள்.

அவர்களில் ஒருவர், தரை மட்டத்தில் நின்றுகொண்டு சுவிட்சை ஆன் செய்தும் ஆஃப் செய்தும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவார். மற்றவர்கள் அவருக்கு பக்கத் துணை.

எதிர் சாரியில் எம்.டி.சி. பஸ் களுக்கென்று ‘ஓரங்கட்டி’ விடப் பட்ட பாதையின் ஓரத்தில் ஆட்டோக் காரர்கள் வரிசைகட்டி நின்றுவிடு கிறார்கள். இதனால் அங்கும் தேவையற்ற நெரிசல்.

சுரங்கப் பாதைக்குள் இறங்கி எளிதாகச் சென்றுவிட முடி யாது. 10 ரூபாய்க்கு 4 சம்சா, ஆப்பிலு, திராச்சை, வாயப்பயம் விற்பவர்கள், சில படிகள் இறங்கி னால் 60 ரூபாய்க்கு எல்லா ‘ஹெட்’டுகளுக்கும் பொருந்தும் ‘ஹெட் செட்’, ‘வாட்சி’ விற்பவர்கள், சப்-வே நடுவே ஒரு பகுதியில் கர்ச்சீப், பளம், ‘ஹேண்ட் பேக்’ விற்பவர்கள் இருப்பார்கள். இந்த சுரங்கப் பாதையைக் கட்ட நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளோ என்னவோ, காவல்துறைக்கும் அரசுக்கும் அவர்களை அங்கி ருந்து அகற்ற மனமே வருவது இல்லை. சென்னையில் நடை பாதைகள், சுரங்கப் பாதைகள் வியா பாரத்தலங்கள்தான். அவர்களு டைய கடை வழியாகப் போக நம்மை அனுமதித்துள்ள பெருந்தன் மைக்குத் தலைவணங்க வேண்டும்!

‘மினி பாலிகா பஜாராக’ இந்த ‘சுரங்கப் பாதை’ இருப்பதால், ‘திறந்த அரங்கப் பாதையே’ சிறந்தது என்று பத்து நிமிஷங்களுக்கொரு முறை பல பேர் சாலையைத் ‘தற்கொலைப் படையாக’க் கடக்கின்றனர்.

இத்தகைய சமூகநீதிக் கார ணங்களால் அரசு பொதுமருத்துவமனை அருகில், இடதுபுறம் திரும்ப வேண்டிய வாகனங்களும் திரும்ப முடியாமல், நேராகப் போக வேண்டிய வாகனங்களும் முன்னேற முடியாமல் நெரிசலாகிறது. (யாரும் மெர்சலாவதில்லை).

அந்த ஆறேழு போக்குவரத்துக் காவலர்களில் ஓரிருவர் அரசு பொதுமருத்துவமனையை ஒட்டிய சுரங்கப் பாதை அருகில் நின்று, ஆட்டோக்களும் இதர வாகனங்களும் பாதையை மறிக்காமல் தொடர்ந்து போக வைத்தால் அனைவரும் எளிதாக பஸ்களில் ஏற முடியும். தந்தை பெரியார் சாலையில் போக வேண்டிய வாகனங்களும் தடையின்றிச் செல்ல முடியும்.

இன்னொரு யோசனை:

‘பீக்-அவர்ஸ்’களில் பல்லவன் சாலை வழியாக எம்.டி.சி. பேருந்து களை மட்டும் சென்ட்ரலை நோக்கி அனுமதித்து, இதர ஆட்டோ, 2 வீலர், 4 வீலர் போன்ற வாகனங்களை அப்படியே நேராகக் கிழக்கில் சென்று இடதுபுறம் திரும்பிப் போகுமாறு திருப்பிவிட்டால், சென்ட்ரல் எதிரில் மேம்பாலத்தில் வாகன நெரிசல் குறையும். ரயில் பயணிகள் பதற்றம் இல்லாமல் உரிய நேரத்தில் ரயிலைப் பிடிப் பார்கள். பிராட்வே, வட சென்னை, வால்டாக்ஸ் ரோடு பகுதிகளுக்குச் செல்கிறவர்கள் சென்ட்ரல் மேம்பாலத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி வாகனங்களைத் திருப்பி விடுவதால் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குள் செல்ல வேண்டிய எம்.டி.சி. பஸ்கள் வரிசையாகவும் எளிதாகவும் குறைந்த நேரத்தில் செல்ல முடியும். மாநகர போக்கு வரத்துத்துறை இதைச் சோதனை அடிப்படையில் முயற்சி செய்து பார்க்கலாம். (‘சோதனை மேல் சோதனை வேண்டுமடா சாமி!’)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x