Published : 04 Apr 2015 07:44 PM
Last Updated : 04 Apr 2015 07:44 PM

இணையதள முன்பதிவு டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் 100 சதவீதம் உயர்வு: ரயில் பயணிகள் கடும் அதிருப்தி

ரயில்களில் பயணம் செய்ய இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ‘இ’ மற்றும் ‘ஐ’ டிக்கெட்களுக்கான சேவைக் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரயில்களில் பயணம் செய்வதற்கு வழக்கமாக ரயில் நிலையங்களில் உள்ள கணினி முன்பதிவு மையங்களுக்கு சென்று முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பயணிகளின் வசதிக்காகவும் கணினி மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன்படி, ஐஆர்சிடிசி இணையதளம் மூலம், இ-டிக்கெட் (எலக்ட்ரானிக் டிக்கெட்), ஐ-டிக்கெட் (இன்டெர்நெட் டிக்கெட்) என 2 வகையான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.

ஐ-டிக்கெட் எடுத்தால் நம் வீட்டுக்கே வந்து சேரும். ஆனால், பயணம் செய்வதற்கு குறைந்தது 4 நாட்களுக்கு முன்பு இந்த டிக்கெட்டை எடுக்க வேண்டும். இ-டிக்கெட் எடுத்தால் அது நமது மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது செல்போனுக்கு குறுந்தகவலாகவோ வந்துவிடும். இந்த வசதிகளால், சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது.

இந்நிலையில், இணையதளம் மூலம் எடுக்கப்படும் டிக்கெட்களுக்கான சேவைக் கட்டணம் நூறு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, இரண்டாம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட இ-டிக்கெட்களுக்கு சேவைக் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரண்டாம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட ஐ-டிக்கெட்களுக்கு சேவைக் கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.80 ஆகவும் ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக் கட்டணத்தில் 10 சதவீத அளவுக்கு மேல் சேவை வரியாக செலுத்த வேண்டும். உதாரணமாக, இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.20 சேவைக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.2.47 சேவை வரியாக வசூலிக்கப்படுகிறது. மேலும், எந்த வங்கியின் கணக்கை பயன்படுத்தி கட்டணத் தொகை செலுத்துகிறோமோ, அந்த வங்கிக்கு ஒரு பரிவர்த்தனைக்கு சுமார் ரூ.10 சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

எனவே, ஆன்லைன் வசதி மூலம் இரண்டாம் வகுப்பு இ-டிக்கெட் எடுக்கும்போது ரூ.33-க்கு மேல் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. சேவைக் கட்டண உயர்வு, பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x