Published : 13 Apr 2015 04:00 PM
Last Updated : 13 Apr 2015 04:00 PM

2014, 15-க்கான தமிழறிஞர் விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழறிஞர்களுக்கும், தமிழ் வளர்க்கும் அமைப்புக்கும், தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கும் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு அறிவிப்பில், "தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் சித்திரைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அரசால் அறிவிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு முதல் அந்நாள் அரசு விழாவாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி தமிழுக்குத் தொண்டாற்றும் தமிழறிஞர்களுக்கும் தமிழ் வளர்க்கும் சிறந்த அமைப்பிற்கும் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகளும் தங்கப் பதக்கங்களும் வழங்குவதென அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு விருது

2014-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான நவி மும்பை தமிழ்ச் சங்கத்துக்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

2014ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கபிலர் விருது - முனைவர் அ.லலிதா சுந்தரம்

உ.வே.சா. விருது - மருது அழகு ராஜா

கம்பர் விருது - முனைவர் செ.வை. சண்முகம்

சொல்லின் செல்வர் விருது - மருத்துவர் சுதா சேசையன்

ஜி.யு.போப் விருது - ஜெ. நாராயணசாமி

உமறுப்புலவர் விருது - முனைவர் சே.மு.முகம்மதலி

கணினித் தமிழ் விருதுகள்:

இத்துடன் 2013-ம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு முனைவர் ந.தெய்வசுந்தரம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

2014-ம் ஆண்டின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விருபா வளர்தமிழ் நிகண்டு து. குமரேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கூறிய விருதுகளைப் பெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூபாய் 1 லட்சமும், 1 சவரன் தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துக்கு விருது

2015-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது சிறந்த தமிழ் அமைப்பான திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்க தமிழக அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு விருதுத் தொகையாக ரூபாய் 5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும் 2015ஆம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு கீழ்க்காண்போர் அரசால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கபிலர் விருது - கவிஞர் பிறைசூடன்

உ.வே.சா. விருது - குடவாயில் பாலசுப்பிரமணியன்

கம்பர் விருது - கோ.செல்வம்

சொல்லின் செல்வர் விருது- முனைவர் சோ.சத்தியசீலன்

ஜி.யு.போப் விருது - மதுரை இளங்கவின் (எம். ஆரோக்கியசாமி)

உமறுப்புலவர் விருது - மு.சாய்பு மரைக்காயர்

இளங்கோவடிகள் விருது - முனைவர் நிர்மலா மோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x