Published : 04 Apr 2015 07:07 PM
Last Updated : 04 Apr 2015 07:07 PM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நுழைவு வாயில்கள் மூடல்: குற்றங்களைத் தடுக்க ரயில்வே போலீஸார் நடவடிக்கை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குற்றங்களைத் தடுக்க நள்ளிரவில் நுழைவு வாயில்களை மூடி போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில், சமீப காலமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இது நடந்து ஓராண்டாகியும் குற்றவாளிகள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று காணாமல் போனது. அக்குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதுவரை அப்பெண்ணை பிடிக்க முடியவில்லை. குழந்தையையும் மீட்க முடியவில்லை.

இதுபோன்ற சம்பவங்களையடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நள்ளிரவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படுகின்றன. இதுகுறித்து, சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் பி.லோகநாதன் கூறியதாவது:

திருட்டு மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பயணிகள் என்ற போர்வையில் நடைமேடை (பிளாட்பாரம்) டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்குள் நுழைவது கண்டறியப்பட்டுள்ளது. வெளியாட்கள் பலரும் ரயில் நிலைய கழிவறைகளை பொது குளியல் அறை போல பயன்படுத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றவர்களைக் கண்டறிந்து அவர்களை ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தொடங்கியுள்ளோம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு அவுரா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுகிறது. அதன் பிறகு, தன்பாதில் இருந்து சென்ட்ரல் வழியாக ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் அதிகாலை 3.30 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இடைப்பட்ட நேரத்தில் ரயில் நிலையத்துக்கு பயணிகள் வருவது மிகவும் குறைவாகவே இருக்கும்.

எனவே இரவு 11.45 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் ஐந்து நுழைவு வாயில்களும் மூடப்படுகின்றன. இந்த நேரத்தில் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில் ஒரே ஒரு வாசல் மட்டுமே திறந்திருக்கும்.

இரவு 11 மணிக்கு மேல் ரயில் நிலையத்துக்குள் தேவையில்லாமல் தங்கியிருப்பவர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்றி வருகிறோம். இப்பணியில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மூலம், ரயில் நிலையத்துக்குள் குற்றங்கள் குறையும் என நம்புகிறோம்.

இவ்வாறு லோகநாதன் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x