Published : 14 May 2014 03:27 PM
Last Updated : 14 May 2014 03:27 PM
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் புதன்கிழமை நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது, சுடுநீர் கொட்டியதில் 6 பேர் காயமடைந்தனர்.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள முதலாவது அணு உலை, கடந்த சில நாள்களுக்கு முன் 900 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டி சாதனை படைத்தது. இதன் அடுத்தகட்டமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் முன், அணு உலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
புதன்கிழமை வழக்கமான ஆய்வுப் பணிகளில் அணுமின் நிலைய பணியாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களும் ஈடுபட்டனர். அணு உலை வளாகத்தில் டர்பைன் அமைந்துள்ள பகுதியில் சுடுநீர் செல்லும் குழாயின் வால்வை திறந்து, ஆய்வு செய்யும் பணியில் ராஜன், பால்ராஜ், செந்தில்குமார், ராஜேஷ், வினு, மகேஷ் ஆகிய 6 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது குழாயில் இருந்து சுடுநீர் வெளியே சிதறியது. இதில் அவர்கள் 6 பேரும் காயமடைந்தனர். செட்டிகுளத்திலுள்ள அணுமின் நிலைய பணியாளர்கள் குடியிருக்கும் `அணு விஜய் நகர்’ மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அணு உலை அதிகாரிகள் கூறியதாவது:
டர்பைன் அமைந்துள்ள பகுதியில் சுடுநீர் பாய்ந்து செல்லும் வால்வ் சேம்பரில், வழக்கமாக 65 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சுடுநீர் இருக்கும். அந்த வால்வை திடீரென்று திறந்தபோது சுடுநீர் கொட்டியிருக்கிறது. வால்வுகளை திறந்து ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பணியாளர்கள் மேற்கொள்ளவில்லை. பராமரிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளின் போது எதிர்பார்க்கப்படும் பட்டியலிடப்பட்ட விபத்துதான் இது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது, என்றனர்.
`அணு மின் நிலையத்தில் நீராவியை எடுத்துச்செல்லும் குழாய்கள், பாய்லர் வெடித்ததாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. அவை வெறும் புரளி’ என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
இந்த விபத்தை, அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் உறுதி செய்தார். காயமடைந்தவர்கள் அபாய கட்டடத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT