Published : 13 Apr 2015 09:21 AM
Last Updated : 13 Apr 2015 09:21 AM

மக்கள் நீதிமன்றங்கள் மூலம் ஒரே நாளில் 12,820 வழக்குகளுக்கு தீர்வு: விவாகரத்து கோரிய 322 தம்பதியர் ஒன்று சேர்ந்தனர்

தமிழகம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 12,820 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்காராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைய செயற்குழு தலைவருமான தாக்கூர் உத்தர விட்டுள்ளார். அவரது உத்தரவில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமைகளில் குறிப்பிட்ட தலைப்புகளில் மக்கள் நீதிமன்றங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மாதம், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள குடும்ப நல வழக்குகள் மற்றும் தொழிலாளர் வழக்குகளுக்கு தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 3 அமர்வுகள் உட்பட தமிழகம் முழுவதும் 252 அமர்வுகளில் 5,154 குடும்பநல வழக்குகளும், 1,808 தொழிலாளர் தொடர்பான வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. இதில், 322 குடும்ப வழக்குகள் மற்றும் 677 தொழிலாளர் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மேலும் கம்பெனி சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான 18,981 வழக்குகள் விசாரிக்கப்பட்டு 11,821 வழக்குகளுக்கு ரூ.53 கோடியே 61 லட்சத்துக்கு சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, இந்த மக்கள் நீதிமன்றங்கள் மூலம் ஒரே நாளில் 12,820 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விவாகரத்து கோரிய 322 தம்பதியர் ஒன்று சேர்ந்துள்ளனர்.

மேலும், வங்கி விவகாரம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்றவை தொடர்பான 40,885 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 26,344 மனுக்கள் மீது ரூ.10 கோடியே 71 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் ரூ.64 கோடியே 32 லட்சம் மதிப்புக்கு சமரசம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x