Published : 27 Apr 2015 06:10 PM
Last Updated : 27 Apr 2015 06:10 PM
ஒடுக்கப்பட்ட அமைப்புகள் இணைந்து புதிய அரசியல் கூட்டணியாக மாறும் வாய்ப்புள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
கட்சியின் தொடக்க விழா 1990-ல் மதுரையில் நடைபெற்றது. அன்று கட்சியின் கொடியை திருமாவளவன் அறிமுகப்படுத்தினார். கட்சி தொடங்கி 25 ஆண்டு ஆனதால் வெள்ளி விழா பொதுக்கூட்டம் மதுரையில் கடந்த சனிக்கிழமை (25-04-2015) அன்று நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்கவந்த திருமாவளவன் `தி இந்து’ செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
கட்சியின் 25 ஆண்டு சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?
சிதறிக்கிடந்த தலித் மக்களை ஒரு அமைப்பின்கீழ் கொண்டுவந்துள்ளோம். பல்வேறு அரசியல் கட்சிகளில் எந்த அதிகாரமும் இல்லாமல் கொத்தடிமைகளாகக் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களை, கட்சி அதிகாரத்தை நுகரும் வகையில் கொண்டுவந்துள்ளோம். வன்கொடுமை நடந்தாலும் கேட்க யாருமில்லை என்ற நிலையை மாற்றி தட்டிக் கேட்கும் சக்தியாக மாற்றியுள்ளது எங்கள் கட்சியின் சாதனை. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு தேர்தல்கள் நடைபெற்றதற்கு எங்கள் கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. 2002-ம் ஆண்டு முதல் சுமார் 1 லட்சம் பேருக்கு தமிழ் பெயர்களை சூட்டியுள்ளோம்.
கட்சி ஆரம்பிக்கும் போது இருந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறியுள்ளதா?
தொடக்கத்தில் தேர்தல் புறக் கணிப்பை முன்னெடுத்தோம். கடந்த 15 ஆண்டுகளாகத்தான் தேர்தலில் பங்கேற்கிறோம். தமிழக வரலாற்றி லேயே சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாதனை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது குறிப்பிட்ட சாதிக்கான கட்சி யாக மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
விடுதலைச் சிறுத்தைகள் என்பது சாதி கட்சி கிடையாது. அனைவருக்குமான கட்சிதான். தொடக்கத்தில் அப்படி இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. தலித், தலித் அல்லாத என அனைத்து சாதியினரும் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் உறுப்பினராகவும், பொறுப்பிலும் உள்ளனர்.
அனைத்து ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் தலைவர்களும் ஒன்றாக இணையும் வாய்ப்பு உண்டா?
ஏற்கெனவே ஒன்றுசேர்ந்து போராடியுள்ளோம். தேவையான காலங்களில் பிற அமைப்புகளுடன் இணைந்து போராடுவோம். ஒடுக்கப்பட்ட அமைப்புகள் அனைத் தும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டணி யாகவும் இடம் பெற வாய்ப்பு உண்டு.
சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பற்றி?
தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர்தான் முடிவு சொல்ல முடியும்.
பொதுவாழ்க்கைக்கு வந்ததற்காக எப்போதாவது வருத்தம் அடைந்தீர்களா?
பொதுவாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டேன். வெற்றியோ, தோல்வியோ அதை எதிர்கொண்டு பயணம் செய்கிறோம். இதற்காக வருத்தமடைந்தது கிடையாது.
கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறதே?
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதற்கென சில கட்சிகள் உள்ளன. ஒடுக்கப்பட்ட அமைப்புகள் ஒருபோதும் அப்படி செய்வதில்லை. வளர்ந்து வருவதை ஏற்றுக்கொள்ளாத சிலர்தான் இவ்வாறு கூறுகின்றனர்.
அடுத்த பாய்ச்சலுக்கு அணியமாவோம், அடுத்த தலைமுறையை அணியமாக்குவோம் என்ற முழக்கத்தின் மையக்கருத்து?
ஓட்டளிப்பவர்களாக மட்டும் இல்லாமல், அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்பதே முழக்கம். அதிகார வலிமையை பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.
அடங்க மறு, அத்துமீறு என்ற முழக்கம் இன்றும் பொருந்துமா?
அடங்க மறு, அத்துமீறு என்பது ஒடுக்கப்பட்ட அமைப்புகளுக்கான உலகம் தழுவிய முழக்கம். ஒடுக்குமுறை இருக்கும் எல்லா காலத்துக்கும் இந்த முழக்கம் பொருத்தமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT