Last Updated : 21 Apr, 2015 09:25 AM

 

Published : 21 Apr 2015 09:25 AM
Last Updated : 21 Apr 2015 09:25 AM

சிக்னல் பிரச்சினையால் ஏற்படும் ரயில் விபத்துகளை தடுக்க பேசின் பிரிட்ஜ் - அரக்கோணம் மார்க்கத்தில் ரூ.28 கோடியில் அதிநவீன பாதுகாப்பு கருவி: அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் அமைக்க திட்டம்

சிக்னல் பிரச்சினை காரணமாக ஏற்படும் ரயில் விபத்துகளைத் தடுப்பதற்காக பேசின் பிரிட்ஜ் - அரக்கோணம் மார்க்கத்தில் ரூ.28 கோடி செலவில் ‘பெலிஸ்’ (Balice) என்ற அதிநவீன முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இத்திட்டம் முழு பயன்பாட்டுக்கு வர உள்ளது.

ரயில் விபத்துகளை தடுப்பதற் காக முன்னெச்சரிக்கை பாதுகாப்பு கருவி (பெலிஸ்) உருவாக்கப் பட்டுள்ளது. ஐரோப்பிய ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு முறை’ என்ற திட்டத்தின் கீழ் நவீன தொழில்நுட்பத்துடன் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் கடந்த 2005-06-ம் ஆண்டில் பரீட்சார்த்த முறையில் இக்கருவி சோதித்துப் பார்க்கப்பட்டது. சோதனை வெற்றி பெற்றதையடுத்து அந்த மார்க்கத்தில் இக்கருவி பொருத்தப்பட்டு தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்தகட்டமாக, பேசின்பிரிட்ஜ் - அரக்கோணம் மார்க்கத்தில் இக்கருவியை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பிரிவு அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விரைவு ரயில்களை இயக்கு வதற்கு 2 ஓட்டுநர்கள் உள்ளனர். ஆனால், புறநகர் மின்சார ரயில் களை ஒரு ஓட்டுநரே இயக்குகிறார். ஒரே நேரத்தில் சிக்னல்களை பார்ப்பதும், ரயில்களை இயக்கு வதும் சிரமமாக உள்ளது. இதனால், சில நேரங்களில் சிக்னல்களை கவனிக்காமல் சென்று விபத்துகள் ஏற்படுகின்றன.

இதைத் தடுப்பதற்காக பெலிஸ்’ என்ற பாதுகாப்புக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவி ஒவ்வொரு சிக்னல் கம்பத்தின் கீழ் தண்டவாளத்தில் பொருத்தப்படும்.

இதில் இருந்து ரயில் இன்ஜின் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்’ மூலம் சிக்னல் பெறப்பட்டு, இன்ஜினில் உள்ள கணினிக்கு அனுப்பப்படும். அதன்பிறகு ஓட்டுநர் அமர்ந்துள்ள கேபினுக்கு தகவல் அனுப்பப்படும். சிவப்பு சிக்னலை கவனிக்காமல் ரயிலை ஓட்டிச் சென்றால் இக்கருவி எச்சரிக்கை செய்யும். இதனால், ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்த முடியும். 500 மீட்டருக்கு முன்பாகவே பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என எந்த நிறத்தில் சிக்னல் உள்ளது என்பதை ஓட்டுநருக்கு இக்கருவி உணர்த்திவிடும்.

மேலும், எச்சரிக்கை விடுக் கப்பட்ட பகுதியில் அனுமதிக் கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் ரயிலை ஓட்டிச் சென்றால் இக்கருவி ஓட்டுநருக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கும். அதையும் மீறி ரயிலை அதிவேகத்தில் ஓட்டினால், இக்கருவி தானாக செயல்பட்டு ரயில் இன்ஜினின் வேகத்தைக் கட்டுப்படுத்தும். இதன்மூலம், விபத்து ஏற்படுவது தடுக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரூ.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட இக்கருவியின் மூலம் தற்போது அந்த மார்க்கத்தில் சிக்னல் பிரச்சினையால் ஏற்படும் விபத் துகள் 98 சதவீதம் வரை குறைந்துள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அடுத்தகட்டமாக பேசின்பிரிட்ஜ் - அரக்கோணம் மார்க்கத்தில் ரூ.28 கோடி செலவில் இக்கருவியை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டு பயன் பாட்டுக்கு வரும். அதன்பிறகு, தாம்பரம் -செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் ரூ.70 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x