Published : 28 Apr 2015 09:37 AM
Last Updated : 28 Apr 2015 09:37 AM

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது எனது வாழ்நாளின் மகிழ்ச்சிகரமான நாள்: திமுக எம்.பி. திருச்சி சிவா பெருமிதம்

திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு தனி நபர் மசோதாவை நிறைவேற வைத்த திமுக எம்.பி. திருச்சி சிவா ஒட்டுமொத்த இந்திய திருநங்கைகளால் பாராட்டப்படுகிறார். அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

தனி நபர் மசோதா என்றால் என்ன? அதை எப்படி, யாரெல்லாம் தாக்கல் செய்யலாம்?

அரசால் கவனிக்கப்படாத முக்கியப் பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்கள் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்யலாம். தகுதி இருப் பின் நாடாளுமன்ற விவாதத்துக்கு பட்டியலிடப்படும். மொத்தம் தாக்கல் செய்யப்படும் மசோதாக் களில் பத்து மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதில் ஐந்தை மட்டும் அன்றைய கூட்டத்துக்கு பட்டியலிடுவார்கள்.

அந்தக் கூட்டத் தொடருக்குள் விவாதம் தொடங்கப்படாவிட்டால் ஐந்து மசோதாக்களுமே காலாவதி ஆகிவிடும். தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க 2007-ல் நான் கொண்டு வந்த மசோதா ஐந்தாண்டுகள் கழித்துதான் பட்டியலுக்கு வந்தது. ஆனால், திருநங்கைகள் மசோதா உடனடியாக அதுவும் ஐந்தில் இரண்டாவதாக பட்டியலிடப்பட்டு பெரும் போராட்டத்துக்குப் பிறகு நிறைவேறி இருக்கிறது.

அப்படியானால் மசோதாவுக்கு எதிர்ப்பு இருந்ததா?

மசோதா மீது நான் பேசிய பிறகு, எப்போதும் இல்லாத வகையில் 22 உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக பதிலளித்த சமூகநீதித் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட், ‘மசோதாவில் நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களை எல்லாம் அரசே செய்யும். எனவே, மசோதாவை திரும்பப் பெறுங்கள்’ என்றார். நான் அதை ஏற்காததால் இந்தக் கூட்டத் தொடரிலும் விவாதம் தொடர்ந்தது.

இம்முறையும் எனது வாதத்தை வலியுறுத்தி அரை மணி நேரம் பேசினேன். மீண்டும் பழைய பல் லவியையே பாடினார் அமைச்சர். அப்படியும் மசோதாவை நிறை வேற்றுவதில் நான் பிடிவாதமாக நின்றதால் குரல் வாக்கெடுப்பு நடத் தப்பட்டு மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

உங்களது தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்களும் ஆதரித்தார்களா?

ஆதரிக்கவில்லை. வாக்கெ டுப்பு நடத்த கோரிக்கை வைத்த துமே அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியே போய் விட்டனர். குரல் வாக்கெடுப்பின் போது அவர்கள் அவையில் இல்லை.

திருநங்கைகள் பிரச்சினைக்கு தனி நபர் மசோதா கொண்டு வர நீங்கள் தீர்மானித்தது ஏன்?

சமுதாய சீர்திருத்த இயக்கமான திமுகவின் ஆட்சியில்தான் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. எனவே, அந்த இயக்கத்தின் பிரதி நிதியாக இந்த மசோதாவை நான் கொண்டு வந்தேன்.

அதுமாத்திரமல்ல.. திரு நங்கைகள் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் நானும் கலந்து கொண்டிருப்பதால் அவர்களின் கஷ்டங்கள், துயரங்கள் எனக்கும் தெரியும். இனி, திருநங்கை களுக்காக தேசிய, மாநில அள வில் ஆணையங்கள் அமைக்கப் பட்டு அவர்களின் நலன்கள் பாது காக்கப்படும் கல்வி, வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கும். எனது வாழ்நாளில் விரல் விட்டு எண்ணக் கூடிய மகிழ்ச்சிகரமான நாட்களில் இந்த மசோதா நிறைவேறிய நாளும் ஒன்று.

மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேறினால்தானே சட்டமாகும்?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியான ஒரு பாதுகாப்பு கிடைக்கும்போது அதை யாரும் எதிர்க்க முடியாது. அப்படி எதிர்த்தால் அந்த பிற்போக்குவாதி களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.

எனவே மக்களவையிலும் இந்த மசோதா நிச்சயம் நிறைவேறி சட்ட வடிவமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x