Published : 16 Apr 2015 09:54 AM
Last Updated : 16 Apr 2015 09:54 AM

கோயில் கும்பாபிஷேகத்தை தன்னிச்சையாக அறிவிப்பதா? - கிராம மக்கள் உண்ணாவிரதம்

கிராம மக்களிடம் கலந்தா லோசிக்காமல், மதுரமங்கலம் திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அனைத்து கட்சியினர் மற்றும் கிராம மக்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கு வார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த திரெளபதியம்மன் கோயில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில், மதுரமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள 32 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் வழிபட்டு வருகின்றனர். திருவிழாக்களிலும் 32 கிராமங்களின் பொதுமக்கள் கலந்து கொள்வர்.

இந்நிலையில், கிராம கோயில் களை சீரமைக்கும் வகையில், இந்து அறநிலையத் துறை திரெளபதியம்மன் கோயிலுக்கு ரூ.50,000 நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து, திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு கோயிலை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தனியார் பங்களிப்புடன் கோயில் கோபுரம், மண்டபம் ஆகியவை பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை சார்பாக வரும் 29-ம் தேதி கோயிலில் கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளதாக விழா அழைப்பிதழ் அச்சடிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை கலந் தாலோசிக்காமல் கும்பாபிஷே கம் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியின் மாவட்ட கவுன்சிலர் குமாரவடி வேலு, அதிமுக கிளை செயலாளர் மணவாளன், இந்துசமய அற நிலையத் துறை ஆய்வாளர் கருபைய்யா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

கோயில் நிர்வாகத்தை கண்டித்து அனைத்து கட்சி யினர் கலந்து கொண்ட உண்ணா விரத போராட்டம் திரெளபதியம் மன் கோயில் திடலில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக, பாமக, காங்கிரஸ், பாஜக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மதுரமங்கலம் கிராம பொது மக்கள் மற்றும் அதனை சுற்றி யுள்ள கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்த சுங்குவார் சத்திரம் போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கருபைய்யா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், ‘இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியில்லாமலேயே கோயில் திருப்பணி கமிட்டி சார்பாக கும்பாபிஷேகம் நடைபெறுவதாக நோட்டீஸ் அச்சிடப்பட்டுள்ளது. இதனால், வரும் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறாது. பொதுமக்கள், திருப்பணி கமிட்டி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்தாலோசித்த பிறகே தேதி குறிப்பிடப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்’ என உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x