Published : 17 Apr 2015 08:03 AM
Last Updated : 17 Apr 2015 08:03 AM

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கண்டுகொள்ளப்படாத 66 இடைக்கால அறிக்கைகள்: மாநில தகவல் ஆணையர் விசாரணையில் அம்பலம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்நோக்கு விசாரணைக் குழு 66 சீலிட்ட கவர்களில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கைகள் இதுவரை பிரித்துப் பார்க்கப்படவில்லை என்று மாநில தகவல் ஆணையர் நடத்திய காணொளிக் காட்சி விசாரணையில் தெரியவந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் கோரி மாநில தகவல் ஆணையத்தில் கடந்த ஆண்டு மேல் முறையீடு செய்திருந்தார். இதன் மீது காணொளிக் காட்சி மூலம் நேற்று விசாரணை நடந்தது.

இதுதொடர்பாக, வேலூர் மத்திய சிறையில் பேரறிவாளனை நேற்று சந்தித்த வழக்கறிஞர் தொல்காப்பியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சிபிஐயால் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணைக்குழு 3 மாதத்துக்கு ஒருமுறை சீலிட்ட உறையில் தடா நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தடா சட்டம் செல்லாது என்ற நிலையில் பல்நோக்கு விசாரணைக்குழு எந்த அடிப்படையில் தங்களது விசாரணை அறிக்கையை தடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றது? ராஜீவ் கொலை வழக்கில் வெளிநாட்டு தொடர்பு மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு குறித்து பல்நோக்கு விசாரணை குழுவின் அறிக்கையில் ஏதாவது தெரிவித்துள்ளார்களா?

மேலும், தடா நீதிமன்றம் அமைக்க மத்திய அரசு அல்லது மாநில அரசு அனுமதி அளித்ததா? தடா நீதிமன்றம் தொடர்ந்து செயல்பட யார் அனுமதி அளித்துள்ளார்கள்? தடா நீதிமன்றத்துக்காக இதுவரை செய்த செலவுகள் எவ்வளவு? தடா நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பான நகல்களை அரசு அல்லது தனிநபர்கள் யாராவது வாங்கியுள்ளார்களா? உள்ளிட்ட விவரங்களை தனக்கு அளிக்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார்.

அதன்படி, நேற்று காலை மாநில தலைமை தகவல் ஆணையர் பதி, தகவல் ஆணையர் அக்பரலி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன், துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், பேரறிவாளன் ஆகியோர் காணொளிக் காட்சி விசாரணையில் இடம்பெற்றனர்.

தனது தரப்பு கோரிக்கை குறித்து பேரறிவாளன் விளக்கினார். அப்போது, பல்நோக்கு விசாரணைக் குழுவினர் இதுவரை சீலிட்ட கவரில் 66 இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கை களை இதுவரை பிரிக்கவில்லை. அந்த கவரில் பேரறிவாளனின் கேள்விக்கு பதில் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த மேல்முறையீடு தொடர்பாக விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று மாநில தலைமை தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x