Published : 06 Apr 2015 02:32 PM
Last Updated : 06 Apr 2015 02:32 PM

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல்: ராமதாஸ் குற்றச்சாட்டு

'ஏழைகளுக்கு மருத்துவம் அளிப்பதற்கான முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.300 கோடி ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால், உயிர் காக்கும் துறையையும் அது விட்டு வைக்கவில்லை என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் புதிய தகவல் ஆகும்.

தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அரசு செயல்படுத்தும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தான் அதிநவீன முறையில் ஊழல் நடைபெறுகிறது.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தமிழக மக்களுக்கான இலவசக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அப்போதைய ஆளுங்கட்சிக்கு நெருக்கமான நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாற்றுக்கள் எழுந்தன. 2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் குறைபாடு இருப்பதாகக் கூறி, அதற்கு பதிலாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 11.07.2011 அன்று அறிவிக்கப்பட்டது.

இன்றைய நிலையில் இத்திட்டம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் உள்பட 769 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றில் 650-க்கும் மேற்பட்டவை தனியார் மருத்துவமனைகள் ஆகும். புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும் போதிலும், இவற்றைவிட பெரிய நோயாக ஊழல் உருவெடுத்து வருகிறது என்பது தான் பெரும் சோகமாகும்.

இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் பெரிய மருத்துவமனைகளின் உரிமையாளர்களை சென்னைக்கு அழைத்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி கடந்த 4 ஆண்டுகளில் எவ்வளவு வருவாய் ஈட்டியுள்ளதோ, அதில் 10% அளவுக்கு ஆளுங்கட்சியின் ஜெயா தொலைக்காட்சிக்கு விளம்பரம் தரும்படி கட்டாயப்படுத்தியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

அதாவது ஒரு மருத்துவமனை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி 4 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருவாய் ஈட்டியிருந்தால் அது ஜெயா தொலைக்காட்சிக்கு ரூ.1 கோடிக்கு விளம்பரம் தர வேண்டும். இத்திட்டத்தால் பெரிய அளவில் வருவாய் ஈட்டவில்லை என்று ஏதேனும் மருத்துவமனை உரிமையாளர்கள் கூறினால், அதை ஏற்க மறுக்கும் அமைச்சர், "அப்படியானால் இதுவரை ஈட்டிய தொகையில் 10% அளவுக்கு மட்டும் விளம்பரம் கொடுத்துவிட்டு இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள். உங்களைவிட அதிக தொகை கொடுத்து இந்தத் திட்டத்தில் சேர ஏராளமான மருத்துவமனைகள் தயாராக இருக்கின்றன" என்று பேரம் பேசுகிறார்.

குறிப்பிட்டத் தொகைக்கு விளம்பரம் தர மறுத்தால் அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை வாங்க முடியாது என்று அமைச்சரே மருத்துவமனைகளை மிரட்டுவதாக கூறப்படுகிறது.

கையூட்டுத் தராத சில மருத்துவமனைகள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அமைச்சரின் அறிவுரைப்படி கையூட்டுத் தர ஒப்புக்கொண்ட பல மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பெருமைகளை விளக்கும் விளம்பரங்களை தங்களது பெயரில் ஜெயா தொலைக்காட்சியில் வெளியிட்டு அதற்கான கட்டணத்தை வரைவோலையாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதாவது ஆளுங்கட்சிக்கு லஞ்சமாக திரைமறைவில் கொடுக்கப்பட வேண்டிய பணம் விளம்பரக் கட்டணம் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு வெளிப்படையாக கொடுக்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான ஊழல் என்று நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டதை விட புத்திசாலித்தனமாக அ.தி.மு.க.வினர் ஊழல் செய்கின்றனர்.

முதலமைச்சரின் விரிவானக் காப்பீட்டுத் திட்டத்துக்காக இதுவரை ரூ.2110.64 கோடி செலவழிக்கப் பட்டிருக்கிறது. நடப்பாண்டுக்கான ஒதுக்கீடு ரூ.781 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2891.64 கோடி செலவழிக்கப்படுகிறது. இதில் 10% அளவுக்கு அதாவது சுமார் ரூ.300 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ஏழைகளுக்கு மருத்துவம் அளிப்பதற்கான திட்டத்தில் ஊழல் செய்வதை விட இவ்வுலகில் ஈனத்தனமான செயல் வேறு எதுவும் இருக்குமா? என்பது தெரியவில்லை.

இத்தகைய ஊழல்களில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்ற போதிலும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, விஞ்ஞான முறையில் நடந்த காப்பீட்டுத் திட்ட ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x