Published : 11 Apr 2015 01:43 PM
Last Updated : 11 Apr 2015 01:43 PM

திண்டுக்கல் மருத்துவர் பாஸ்கரன் கொலை வழக்கில் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை

திண்டுக்கல் மருத்துவர் பாஸ்கரன் கொலை வழக்கில், அவரைக் கடத்திக் கொலை செய்த 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டை சேர்ந்த பிரபல மருத்துவர் பாஸ்கரன் (77). இவர் பழநி சாலையில் மருத்துவமனை நடத்தி வந்தார். பகுதி நேரமாக பல்வேறு தொழில்களை செய்து வந்ததால் இவருக்கு பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் இருந்தன.

கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி அதிகாலை காஸ்மோ பாலிடன் கிளப் சாலையில் நடைபயிற்சி சென்ற இவரை, காரில் வந்த கும்பல், கடத்திச் சென்று ரூ. 5 கோடி கேட்டு மிரட்டினர். அந்தப் பணத்தை திருச்சிக்கு எடுத்து வருமாறும், அதன்பின் பணத்தை கொடுக்கும் இடத்தை கைபேசியில் தெரிவிப்பதாகவும் கூறினர். அவர்கள் கேட்ட பணத்தை உறவினர்கள் கொடுக்கத் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல் மருத்துவர் பாஸ்கரனைக் கொலை செய்து உடலை மூட்டையில் கட்டி பொள்ளாச்சி ஆழியாற்றில் வீசிச் சென்றது.

இந்நிலையில், பாஸ்கரனை தேடிவந்த திண்டுக்கல் வடக்கு போலீஸார், ஆழியாற்றில் அவரது சடலத்தை மே 8-ம் தேதி கைப்பற்றினர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.

கொலையாளிகளை விரைவாக கண்டுபிடிக்கக் கோரி, திண்டுக்கல்லில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களை நடத்தின.

இதுதொடர்பாக சட்டசபையில் பாலபாரதி எம்எல்ஏவின் கோரி க்கையை ஏற்று, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

போலீஸாரின் தீவிர விசாரணை யை அடுத்து, திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கருணாநிதி நகரைச் சேர்ந்த துளசிதாஸ் மகன் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் (28), பழநி புது ஆயக்குடியைச் சேர்ந்த ஷேக்ஒலி மகன் சபீர் அகமது (22), பழநி ஆயக்குடியைச் சேர்ந்த முகமது அபுதாகீர் மகன் உமர் முக்தார் (24), திண்டுக்கல் செட்டியப்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சங்கர் (25), பழநி பாண்டியன் நகர் மகாலிங்கம் மகன் முகிலன் (20), பழநி ரயில்வே பீடர் ரோட்டைச் சேர்ந்த சித்திவிநாயகர் மகள் மஞ்சு பார்கவி (23), உத்தமபாளையம் அணைப்பட்டியைச் சேர்ந்த சிவனாண்டி மகன் ராஜ்குமார் (24), திண்டுக்கல் பொன்னாகரத்தை சேர்ந்த ராஜ் மகன் துரைபாண்டி (20), தாராபுரத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மகன் விவேக் (23) ஆகிய ஒன்பது பேரை சிபிசிஐடி போலீஸார் ஆகஸ்ட் 22-ம் தேதி கைதுசெய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. 99 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

1,300 பக்க குற்றப் பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கொலையாளிகளுடைய கைப்பேசி குரல் பதிவுகள், மரபணு சோதனைகள், பாஸ்கரன் அணிந்திருந்த நகைகள் உள்ளிட்ட 66 விதமான ஆதாரங்களை போலீஸார் சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்துவந்த மாவட்ட நீதிபதி பொங்கியப்பன் நேற்று தீர்ப்பளித்தார்.

பிரதான குற்றவாளியான கார்த்திகேயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், சபீர் அகமது, உமர்முக்தர் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சங்கர், முகிலன், ராஜ்குமார், துரைபாண்டி, விவேக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, தண்டனையை அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

ஆறாவது குற்றவாளியான மஞ்சு பார்கவிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவர், ஏற்கெனவே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்ததால் உடனடியாக ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியதால் விடுதலை செய்யப்பட்டார்.

அடையாளம் காண உதவிய மருத்துவரின் நகைகள்

மருத்துவர் பாஸ்கரனுக்கு திருமணத்தின்போது, அவரது மாமனார் வழங்கிய மூங்கில் வடிவிலான ஆஞ்சநேயர் டாலர் போட்ட தங்கச் சங்கிலியைத்தான் சாகும்வரை அணிந்திருந்தார்.

மருத்துவரை கடத்திக் கொலைசெய்த குற்றவாளிகள், அவரது தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். செலவுக்காக அந்த சங்கிலியை சபீர் அகமது கோவை அடகு கடையில் அடகுவைக்கச் சென்றார்.

அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் அவரது உருவம் பதிவானது. இந்த கேமரா காட்சிகள்தான், இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு துருப்புச் சீட்டாக இருந்தது. மேலும் சூப்பர் இம்போசிங் டெஸ்ட், டிஎன்ஏ பரிசோதனை, செல்போன் டவர் மூலம் கொலையாளிகளின் கைபேசி உரையாடல்கள் குறித்த விஞ்ஞான ரீதியான சோதனைகளும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சிபிசிஐடி போலீஸாருக்கு உதவியுள்ளன.

4 பேர் கல்லூரி மாணவர்கள்

மஞ்சுபார்கவி, இந்த வழக்கில் கைதாகும்போது, மதுரையில் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரதான குற்றவாளியான கார்த்திகேயனை காதலித்து வந்தார். அவர் கூறியதன்பேரில், திண்டுக்கல் விடுதியில் தங்கி மருத்துவர் பாஸ்கரனை வேவு பார்த்து குற்றவாளிகளுக்கு உதவியதால் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த வழக்கில் கைதானபோது துரைபாண்டி கல்லூரி மாணவராகவும், முகிலன், விவேக் ஆகியோர் பாலிடெக்னிக் மாணவர்களாகவும் இருந்துள்ளனர்.

நிறைய படிக்க ஆசை: மஞ்சு பார்கவி

மஞ்சு பார்கவியை பார்க்க, அவரது பெற்றோர், உறவினர்கள் யாரும் வரவில்லை. அதனால், அவர் விடுதலையானாலும் நீதிமன்ற வளாகத்தில் பிரமைபிடித்தாற்போல நின்று கொண்டிருந்தார். அபராதத் தொகையைக் கூட செலுத்த பணம் இல்லாததால், அவரது வழக்கறிஞர் 1,000 ரூபாய் கட்டினார்.

அவரிடம் விடுதலை குறித்து கேட்டபோது, ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது. சிறை அனுபவம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. நிறைய படிக்க ஆசைப்படுகிறேன். வீட்டுக்குச் சென்றதும் பெற்றோரை சந்திப்பேன். கல்லூரிப் படிப்பை தொடர முடிவு செய்துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x