Published : 18 May 2014 12:00 PM
Last Updated : 18 May 2014 12:00 PM
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றிதழ்களை தாலுகா அலுவலகங்களில் வாங்க முடியாமல், பிளஸ்-2 மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்னும் 2 நாட்களே இருப்ப தால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்று (டி.சி.), சாதி சான்றிதழ், முதல்முறை பட்டதாரி எனில் அதற்கான சான்றிதழ், வேறு மாநிலங்களில் படித்திருந்தால் இருப்பிடச்சான்றிதழ் என தேவைக்கு ஏற்ப சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
மாணவர்கள் கடைசி நேரத்தில் சிரமப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்துடன் என்னென்ன சான்றிதழ்கள் இணைக்க வேண்டும், அவை எந்த மாதிரி இருக்க வேண்டும் என்ற பட்டியலை பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்னரே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுவிட்டது.
தேர்தல் காரணமாக...
மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்களைப் பெற முன்கூட்டியே விண்ணப்பித்த போதிலும் மக்களவை தேர்தல் பணி காரணமாக, விஏஓ, ஆர்ஐ, வட்டாட்சியர் ஆகிய வருவாய்த் துறையினர் பரபரப்பாக இருந்த தால் அவர்களிடம் கையெழுத்து வாங்க இயலவில்லை. ஒருவேளை விஏஓ-வை பார்க்க முடியாமல் இருந்திருக்கும். இல்லாவிட்டால் ஆர்ஐ-யிடம் கையெழுத்து வாங்க முடியாத நிலை இருந்திருக்கும்.
இருவரிடமும் கையெழுத்து வாங்கி யிருந்தால் தாலுகா அலுவலகத் தில் வட்டாட்சியரை பார்க்க முடியாமல் போயிருக்கும். தமிழகம் முழுவதும் அனைத்து மாணவ - மாணவிகளும் இதே பிரச்சினையை சந்தித்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார் கள்.
மாற்று ஏற்பாடு
இதற்கிடையே பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி. வருகிற 21-ம் தேதி வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித் திருப்பதால், அந்த சான்றிதழ்களை கலந்தாய்வின்போது சமர்ப்பித் தால் போதும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருக்கிறது.
இந்த விஷயத்தில் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள் சிபிஎஸ்இ மாணவர்கள்தான். காரணம், அவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவே வெளியிடப்பட வில்லை. சிபிஎஸ்இ மாணவர் கள் கடைசி தேதிக்குள் விண்ணப் பித்துவிட வேண்டும். தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித் துக்கொள்ளலாம் என்றும் அண்ணா் பல்கலைக்கழகம் அறிவித்துள் ளது.
ஒன்று சான்றிதழ்கள் சமர்ப் பிக்க காலஅவகாசம் வழங்க வேண்டும். அல்லது உரிய தகுதியை விண்ணப்பத்தில் பதிவு செய்துவிட்டு அதற்குரிய சான்றிதழ் களை கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க அனுமதி தர வேண்டும். இது மாணவ-மாணவி கள் முன்வைக்கும் வேண்டுகோள். பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் மற்றும் டிசி இன்னும் வழங்கப் படாததால் அவற்றை கலந்தாய்வு நேரத்தில் சமர்ப்பித்தால் போதும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் பதில்
இப்பிரச்சினை குறித்து பொறியியல் கலந்தாய்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பொறியியல் கலந்தாய்வு பணிகளை ஜூலை 31-ம் தேதிக்குள் முடித்துவிட்டு ஆகஸ்ட் 1-ம்தேதி வகுப்புகளை தொடங்கிவிட வேண்டும். பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரும்.
அவற்றை பரிசீலனை செய்து ரேங்க் பட்டியல் வெளியிட்டு, கலந்தாய்வு நடத்தி முடிப்பது என்பது மிக நீண்ட பணி. எனவே, விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வாய்ப்பில்லை. தற்போது சமர்ப்பிக்க முடியாத சான்றிதழ்களை கலந்தாய்வின்போது சமர்ப்பிக்க அனுமதி அளிப்பது தொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.
தேர்தல் துறை விளக்கம்
தேர்தல் பணிகளைக் காரணம் காட்டி சான்றிதழ்களை தருவதில் வருவாய்த் துறையில் தாமதம் செய்வது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டது. எனவே தேர்தலைக் காரணம் காட்டி சான்றிதழ்கள் விநியோகத்தை தாமதப்படுத்துவது தவறு. எல்லா மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை பிரத்யேகமாக கவனிக்கும் தாசில்தார்களுக்கு மட்டும்தான் இன்னும் சில நாள்களுக்கு பணிகள் இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு தேர்தல் பணிகள் முடிந்துவிட்டன.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT