Published : 11 May 2014 12:00 AM
Last Updated : 11 May 2014 12:00 AM
திருவாரூரில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவை முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்கள் புறக்கணித்துவருவது இசை ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பிறக்க முக்தியளிக்கும் தலமான திருவாரூரில் அவதரித்தவர் கள் கர்நாடக இசைக்கு பெருந் தொண்டாற்றிய தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்ஷிதர் ஆகியோர். இவர்கள் மூவரும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் என்று இசை உலகத்தினரால் போற்றப்படுவர்கள். திருவாரூரில் சம காலத்தில் பிறந்து 5 ஆண்டுகால இடைவெளியில் வாழ்ந்தவர்கள்.
இனிமையான கீர்த்தனைகளைத் தந்தவர்கள்...
1767-ம் ஆண்டு பிறந்த தியாகராஜர் தனது சிறு வயதிலேயே ராம நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டே தனது புலமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டவர். தனது ஆயுள் காலத்தில் சங்கீதத்தால் மனிதர்களைப் போற்றுவதையும், புகழ்வதையும் தவிர்த்து, சீதாராமனை பலவாறு உருவகப்படுத்தி பல கிருதிகளை சுவைபட இயற்றியவர் இவர்.
சியாமா சாஸ்திரிகள் 1762-ம் ஆண்டில் பிறந்தவர். தஞ்சாவூர் அருள்மிகு காமாட்சி அம்மனை தனது ஆத்மார்த்த தெய்வமாகப் பாவித்து, பல கீர்த்தனைகளை இயற்றியவர். நாகை நீலாயதாட்சி, திருவையாறு தர்மஸம்வர்த்தனி, மதுரை மீனாட்சி உள்ளிட்ட தெய்வங்கள் மீது பல இனிமையான கீர்த்தனைகளை இயற்றியவர் சியாமா சாஸ்திரிகள்.
1776-ம் ஆண்டு பிறந்த முத்துசாமி தீட்ஷிதர், திருவாரூரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு தியாகராஜ சுவாமி, அருள்மிகு கமலாம்பாள், மகா கணபதி ஆகியோர் மீது அதிக அளவிலான கிருதிகளை இயற்றிய பெருமைக்குரியவர். இவர் இயற்றிய நவாவரண கீர்த்தனைகள் சங்கீத உலகுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகும் என்கின்றனர் இசைக் கலைஞர்கள்.
இந்த மும்மூர்த்திகள் வாழ்ந்த இல்லங்கள் இன்றளவும் திருவாரூரில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இளம் சங்கீத வித்வான்கள், இசை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் என பலரும் இந்த இல்லங்களைப் பார்வையிட்டு நெகிழ்ந்து வருகின்றனர்.
30 ஆண்டுகளாக ஜெயந்தி விழா…
காஞ்சி காமகோடி பீடத்தின் கர்நாடக சங்கீத சேவா அறக்கட்டளை சார்பில் கடந்த 30 ஆண்டுகளாக மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் இந்த விழா ஏப்ரல் 30-ம் தேதி தொடங்கி மே 6-ம் தேதி நிறைவடைந்தது. இவ்விழாவையொட்டி மும்மூர்த்திகள் பிறந்த இல்லங்களில் சிறப்பு ஹோமங்கள் செய்தும், அவர்களது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு ஆராதனைகள் செய்தும் கொண்டாடினர். திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த விழாப் பந்தலில் பல்வேறு இசைக் கலைஞர்கள், பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல ஆண்டுகளாகப் புறக்கணிப்பு…
இந்த நிகழ்ச்சிகளில் ஓரிரு முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களைத் தவிர மற்ற முன்னணி கலைஞர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.
இதுகுறித்து ஜெயந்தி விழா குழு நிர்வாகிகளில் ஒருவரான ஆடிட்டர் வி.பாலசுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் கூறியது:
“மும்மூர்த்திகளின் ஜெயந்தி விழாவில் முன்னணி இசைக் கலைஞர்கள் தொடர்ந்து பங்கேற்பதில்லை. இது கர்நாடக சங்கீத இசை ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
கர்நாடக சங்கீத வித்வான்கள் சங்கீத மும்மூர்த்திகள், சீர்காழி மூவர் ஆகியோரது பாடல்களை மேடைகளில் பாடி வருகின்றனர். இதற்கு யாரும் ராயல்டி தொகை எதுவும் செலுத்துவதில்லை. ஆனால், பல கலைஞர்கள் இந்த விழாவுக்கு வருவதற்கு சன்மானம் கேட்கின்றனர்.
ஜெயந்தி விழாக்களில் பங்கேற்க வேண்டியது இசைக் கலைஞர்களின் கடமையாகும். இந்த விழாவையே இசைக் கலைஞர்கள்தான் நடத்த வேண்டும். இல்லையேல் விழா எடுப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த விழாக்களில் பங்கேற்பதை இசைக் கலைஞர்கள் ஆத்ம திருப்தியாக செய்ய வேண்டும். இதனை அவர்கள் உணர வேண்டும் என்பதுதான் இசை ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது” என்றார்.
பற்றா… விளம்பர உத்தியா?
தியாகராஜர் ஜெயந்தி விழாவுக்கு வர விரும்பாத முன்னணி இசைக் கலைஞர்கள் அவரது சமாதி அமைந்துள்ள இடமான திருவையாறில் நடைபெறும் ஆராதனை விழாவில் தங்களது நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குவது உண்மையில் தியாகராஜர் மீது கொண்டுள்ள பற்று காரணமாகவா அல்லது வேறு ஏதேனும் விளம்பர உத்தியா என இசை ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT